இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்த விஜய்யின் வெற்றி:அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வாழ்த்து
இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்த விஜய்யின் வெற்றி:அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வாழ்த்து
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இலங்கை நாடாளுமன்றத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதேபோல் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மே 5-ம் தேதி இன்று நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தின்போது பேசிய சுந்தரலிங்கம் பிரதீப், இலங்கை மக்கள் சார்பாக இந்திய வம்சாவழி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
"தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்ற ஜோசப் விஜய் தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் வாழும் அனைத்து மக்களின் நலனுக்காக அவர் முன்னெடுக்கும் சகல முயற்சிகளும் வெற்றிபெற வேண்டும் எனவும் பேசினார்.
இதேபோல், சாணக்கியன் இராசமாணிக்கம், வரலாற்றுச் சாதனை படைத்து வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு இலங்கையின் உயரிய சபை வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
ஈழத் தமிழர் தொடர்பான பிரச்னைகளில் இந்திய மத்திய அரசும், புதிய தமிழக அரசும் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகச் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றம், இலங்கைத் தமிழர் விவகாரங்களில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதோடு, உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2025-ல் அவர் கச்சத்தீவு குறித்துப் பேசிய கருத்துகள் இலங்கையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர் நலனுக்கு நிரந்தரத் தீர்வு என விஜய் வலியுறுத்தியது கொழும்பு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் (Jaffna) அவரது போஸ்டர்கள் அகற்றப்பட்டன. 1974-ல் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதற்கு தி.மு.க.வே காரணம் என்று விஜய் விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் ஈழத் தமிழர்களின் ஆதரவு மற்றும் கச்சத்தீவு போன்ற விவகாரங்களில் விஜய்யின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை இலங்கை அரசியல் வட்டாரம் கூர்ந்து கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0