அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது ; காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது ; காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை
கடந்த தி.மு.க ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், 117 தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
தனியார் பள்ளி சங்கத்தின் தலைவர் டி.சி. இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூன் 27, 2026 அன்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்குச் சொந்தமான சென்னை மற்றும் திருச்சி இல்லங்கள் உட்பட 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும், இது தொடர்பாக அவரிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாகப் போலீஸார் தீவிர விசாரணையும் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷை நேரில் அழைத்தும் விசாரணை நடத்தினர். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்த ஊழல் புகாரில் சட்டவிரோதமாக நடைபெற்ற பணபரிவர்த்தனைகள் தொடர்பாகவும் அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு கடந்த 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்டு, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே, அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்கும் வகையில், நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல் உதவி ஆணையர் ஒருவர் தாக்கல் செய்த பதில் மனுவில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான முத்துக்குமார், பாதுகாப்பாக இருப்பதாகவும், சரியான நேரத்தில் அவர் திரும்பி வருவார் என்றும் அன்பில் மகேஷ் உறுதியளித்ததாக தெரிவித்தது. மேலும், அன்பில் மகேஷுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்ட காவல்துறை தரப்பு, 'கட்சி நிதி' என்ற பெயரில் லஞ்சப் பணம் அன்பில் மகேஷிடம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களைச் சேகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தது.
தள்ளுபடி இந்த நிலையில், தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன் இன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவால், இந்த வழக்கில் அன்பில் மகேஷ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைந்தகரையில் உள்ள வழக்கறிஞர் வில்சன் அலுவலகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து விட்டு வெளியே வரும்போது சிசிபி போலீசார் சுற்றி வளைத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வளாகத்திற்கு அன்பில் மகேஸை நேரில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையின் இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அன்பில் மகேஷ் பொய்யா மொழியை சிறையில் அடைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழக்கில் இன்று தீர்ப்பு வந்த அடுத்த நிமிடமே தமிழக போலீசார் திருச்சியில் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு, டி நகரில் உள்ள அவரது இல்லம் என அனைத்திலும் தேடுதல் வேட்டையை நடத்தினர். அங்கு எங்கும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரது அலைபேசி எண்களை ட்ரேஸ் செய்தனர் பின்னர் வழக்கறிஞர் அலுவலகம் சென்று அவரை கைது செய்தனர். அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சிரித்த முகத்துடன் ஒத்துழைப்பு கொடுத்து கைதுக்கு உடன்பட்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0