திருச்சியில் அதிர்ச்சி: சட்டவிரோத ‘ஜிஎஸ்எம் கேட்வே’ சாதனம் பறிமுதல் - சைபர் கிரைம் போலீஸ் அதிரடி

Oct 28, 2026 - 10:58
 0  63
திருச்சியில் அதிர்ச்சி: சட்டவிரோத ‘ஜிஎஸ்எம் கேட்வே’ சாதனம் பறிமுதல் - சைபர் கிரைம் போலீஸ் அதிரடி

திருச்சியில் அதிர்ச்சி: சட்டவிரோத ‘ஜிஎஸ்எம் கேட்வே’ சாதனம் பறிமுதல் - சைபர் கிரைம் போலீஸ் அதிரடி

திருச்சி உறையூர் பகுதியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சிம் கார்டுகளை (SIM Cards) இயக்கப் பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட ‘ஜிஎஸ்எம் கேட்வே’ (GSM Gateway) அல்லது ‘சிம் பாக்ஸ்’ என்ற அதிநவீன வன்பொருள் சாதனத்தை சைபர் கிரைம் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

பொதுவாகச் சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணம் (International Tariff) மிக அதிகம். ஆனால், இந்த சிம் பாக்ஸ் மூலம் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக (Local Calls) மாற்றி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருவாயை இந்த கும்பல் திருடி வந்துள்ளது. 

மேலும், வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகள் சர்வதேச எண் எனத் தெரியாமல், ஏதோ ஒரு சாதாரண உள்ளூர் மொபைல் எண்ணில் இருந்து வருவது போலவே காட்டுவதால், குற்றவாளிகள் தங்களின் உண்மையான இருப்பிடத்தை எளிதாக மறைத்துக் கொள்கின்றனர். இது தொடர்பாக திருச்சியில் ஒருவரைப் போலீஸார் கைதும் செய்துள்ளனர்.

இதுகுறித்து மாநகர காவல் துறை துணை ஆணையர் மணிகண்டன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது ; நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அவர்கள் நவீன கருவிகளைக் கொண்டு எங்கிருந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதை அறிய முடியாமல் விசாரணையை குழப்பும் வகையில் செயல்படுகின்றனர்.

எனவே, மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து மாநகர சைபர் கிரைம் போலீசார் 'டிஜிட்டல் அரஸ்ட்' தொடர்பான வழக்கு விசாரணையை தொடங்கினோம். போலீசாருக்கு சவாலாக இருக்கும் இதுபோன்ற வழக்கில் குற்றவாளியின் இடத்தை முதன் முறையாக கண்டறிந்தோம்.

திருச்சி உறையூர் பகுதியில் ஒரு அறையில் இருந்து இவர்கள் இயங்கி வருவது தெரிய வந்தது. அவர்கள் குற்றச்செயல்களுக்கு ஈடுபடுத்தும் உலக நாடுகள் அனைத்திலும் தடைசெய்யப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள "சிம் பாக்ஸ்" என்ற கருவி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணை நடந்து வருவதால் விபரங்களை வெளியிட முடியவில்லை.

ஒரு சிம்பாக்ஸ் கருவியில் ஒரே நேரத்தில் 360 சிம்கார்டுகளை பயன்படுத்தி பேச முடி யும். இப்படி இவர்கள் பயன் படுத்திய 6 சிம்பாக்ஸ்கள், 2 கேமராக்கள் உள்ளிட்ட கருவிகள் சிக்கியுள்ளன. இந்த நவீன கருவி திருச்சியில் ஒரு இடத்தில் இருந்து செயல்படுவதைப்போல காட்டும். சில நொடிகளில் பஞ்சாப் மாநிலத்துக்கு டவர் லொகேஷன் செல்லும், அடுத்த சில நொடிகளில் கேரளாவுக்கு மாறும். இப்படி ஒரு அழைப்பில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களை காட்டும் வகையில் இந்த சிம்பாக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திதான் சைபர் கிரைம் குற்றங்கள் நடக்கின்றன.

பொதுமக்கள் சிறிய முதலீடு செய்து அதிக பணத்தை பெறலாம் என்ற ஆசைவார்த்தையை நம்புவது, யாராவது லிங்க் அனுப்பினால் அதை தொடுவது உள்ளிட்ட செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும். ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே கட்டணம் இல்லா 1930 தொலைபேசி எண் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0