அரியமங்கலம் குப்பை கிடங்கு 2027க்குள் அகற்றப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Apr 4, 2026 - 13:08
Apr 4, 2026 - 13:13
 0  108
அரியமங்கலம் குப்பை கிடங்கு 2027க்குள் அகற்றப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அரியமங்கலம் குப்பை கிடங்கு 2027க்குள் அகற்றப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருவெறும்பூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வானவேடிக்கைகளுடன் பல்வேறு விதமான இசைக்கருவிகளுடன் கரகாட்டம், பொம்மை ஆட்டத்துடன் ஊர்வலமாக வந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இது குறித்த விபரம் வருமாறு ;

தமிழகம் முழுவதும் வரும் 23 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30ஆம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில், திருவெறும்பூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் திமுக வேட்பாளராக தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெல் தொமுச தொழிற்சங்க அலுவலகத்தில் இருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன், கரகாட்டம், பொம்மை ஆட்டம் மற்றும் தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக வந்தவருக்கு வழியில் தொண்டர்கள் வேல் கொடுத்தனர். பின்னர் கிரேன் மூலம் மாலை அணிவித்தனர்.

அதன் பிறகு அன்பில் மகேஸ்பொய்யாமொழி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனுவை திருவெறும்பூர் தேர்தல் நடத்தும் அலுவலரான அமுதாவிடம் வழங்கினார். மாற்று வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்;

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு வேட்பாளராக மூன்றாவது முறை தன்னை நிறுத்தியதற்கு தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருவெறும்பூர் தொகுதியில் நான் செய்த வளர்ச்சி பணி மற்றும் கூட்டணி கட்சியினர் பலம் மற்றும் ஐந்து ஆண்டுகள் நான் செய்த சாதனை மீண்டும் வெற்றி பெற்ற பிறகு என்ன செய்ய போகிறோம் என்ற தேர்தல் வாக்குறுதியை வைத்து தேர்தலில் வாக்கு கேட்க உள்ளேன்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் முதலாக இந்த தொகுதியில் போட்டியிட வந்த பொழுது எந்த மனநிலையில் வந்தேனோ அதே மனநிலையில் தான் தற்போது உள்ளேன். தொகுதி மக்களுக்கு நான் அதிகம் செய்வேன் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

நான் எம்எல்ஏவாகவோ அமைச்சராகவோ அல்லது ஒரு சேவகனாக இந்த தொகுதியில் செயல்படுவேன். மக்களுக்கு தேவையான பல்வேறு நலத் திட்டங்களை தொகுதியில் கொண்டு வந்துள்ளேன். இதுவரை ரூ.450 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை தொகுதிக்கு செய்து உள்ளேன்.

திருவெறும்பூர் தொகுதியில் 20 ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என பல்வேறு பட்ட நிர்வாகம் இருந்தாலும் அவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுக்கப்படும்.

அதேபோல் அரியமங்கலம் பொதுமக்களின் நீண்ட கால பிரச்சனையாக இருக்கும் குப்பை கிடங்கு மாற்றுவதற்கு உரிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. நான் அமைச்சரான உடனே இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டேன். அந்த இடத்தில் குப்பை சாயில் அதிகமாக இறங்கி உள்ளதால் அதில் கட்டிடங்கள் கட்ட முடியாது. அதனால் அந்த இடத்தில் தற்பொழுது பொழுதுபோக்கு பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேருவிடம் கேட்டு நிதி பெற்று நிறைவேற்றப்படும்.

10 ஆண்டுகளுக்கு பிறகு தான் அந்த இடத்தில் கட்டிடம் கட்டப்படும். இந்த குப்பையை ஈரப்பதம் உள்ள குப்பை மற்றும் காய்ந்த குப்பை என இரண்டாக தரம் பிரித்து அவற்றை அங்கிருந்து அகற்றும் பணி நடைபெறுகிறது, வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த இடத்திலிருந்து குப்பைகள் அகற்றப்படும்.

தமிழகத்தில் எத்தனை போட்டிகள் இருந்தாலும் தமிழகத்திற்கும் டெல்லிக்கும் இடையில் தான் போட்டி. நாம் என்ன செய்தோம் என்பதை சொல்லித்தான் வாக்கு சேகரிக்கிறோம். கல்வியில் தமிழகத்தில் முன்மொழிக் கொள்கையை நாம் ஏற்க முடியாது. மாநில உரிமைக்கு குரல் கொடுப்போம், அங்கு இருந்து கொண்டு அவர்கள் நாம் என்ன செய்ய செய்ய வேண்டும் என கூறுவதை நம்மால் ஏற்க முடியாது. இங்குள்ள மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நான் அதனை செய்வேன்.

 2021 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் சாலை பணியை செய்வதற்கு முடிவு செய்தோம் அதற்குரிய சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர் மூலம் அந்த பகுதியில் உள்ள நிலங்களை கையகப்படுத்தி அதற்குரிய பணிகள் தொடரும் என்று கூறினார். 

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது திருச்சி எம்பி துரை வைகோ, மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி திலீபன், ரமேஷ் தேமுதிக நிர்வாகி டிவி கணேஷ் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0