தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாகுமா திருச்சி? திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவினரிடம் அமைச்சர்கள் கே என் நேரு, மகேஷ் மனு
தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாகுமா திருச்சி? திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பக்குழுவினரிடம் அமைச்சர்கள் கே என் நேரு, மகேஷ் மனு
திருச்சி மாநகர் தமிழகத்தின் இதயம் போல் மத்திய பகுதியாக விளங்குவதாகும். கன்னியாகுமரி முதல் தமிழகத்தின் நான்கு எல்லைகளில் இருந்தும் திருச்சிக்கு சுமார் நான்கு மணி நேரத்தில் சாலை வழியாக வந்து சேர்ந்துவிட முடியும். எனவே திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பக்குழு கருத்துகேட்புக் கூட்டத்தில் வைக்கப்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு ;
தமிழகத்தில் வரக்கூடிய 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழகம் முழுவதும் கருத்துக்களை கேட்டு வருகிறது.
அதன்படி, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கருத்துகேட்புக் கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுத் தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான எம்.பி கனிமொழி தலைமையிலான குழுவினர் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்ட திமுக நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டனர்.
அதன்படி, கும்பகோணம் தமிழ்நாடு அரசு பஸ் போக்குவரத்து கோட்டத்தை பிரித்து புதிதாக திருச்சி தமிழ்நாடு அரசு பஸ் போக்குவரத்து கோட்டத்தை உருவாக்க வேண்டும். கோவையை போல் திருச்சி அரியமங்கலத்தில் செம்மொழி பூங்காவை உருவாக்க வேண்டும். புதிதாக அரசு சித்தா மற்றும் பல் மருத்துவ கல்லூரியை அமைக்க வேண்டும், பத்திரிக்கையாளர் நல வாரியம் தொடர்பாக பத்திரிகையாளர்களும், இலங்கைத் தமிழ் அகதிகள், இந்திய வம்சாவளி குடியுரிமையற்ற தமிழர்களுக்கான இந்திய குடியுரிமை என்ற நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சினையை பிரதானமாக வைத்து தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் சார்பிலும் பல்வேறு மனுக்கள் வழங்கப்பட்டது.
இதே போல், தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவிக்கக் கோரி அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இணைந்து கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது: திமுகவுக்கு எப்போதும் கதாநாயகன் தேர்தல் அறிக்கை என்று கருணாநிதி கூறுவார். வெற்றிக்கு பிரதானமாக அமையும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு கனிமொழி தலைமை வகித்து கருத்துக்களை கேட்டு வருகிறார். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருக. நீங்கள் தரும் தேர்தல் அறிக்கையில் பிரதானமாக திருச்சி இருக்க வேண்டும்.
அழுதக் குழந்தை தான் பால்குடிக்கும்’ என்பார்கள். திருச்சிக்கு வேளாண் பல்கலைக்கழகம், பல், சித்தா மருத்துவக் கல்லூரிகள், ஸ்ரீரங்கத்துக்கு செல்வதை போல குடமுருட்டியிலிருந்து தடுப்பணையுடன் கூடிய பாலம் வேண்டும். சமயபுரம், திருவெறும்பூர், திருச்சி, அல்லித்துறை வரை சென்று பெரிய வட்டமாக சுற்றுச்சாலை அமைத்தால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். அனைத்து தொகுதியிலும் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூர் ஆகிய 2 தொகுதிகளில் இல்லை. பெரிய மனது செய்து தேர்தல் அறிக்கையில் கொண்டு வாருங்கள். கடந்த முறை நான் வராமல் ஏமாந்துவிட்டேன். இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது. அதனால் முதல் ஆளாக ஓடி வந்துவிட்டேன். நாங்கள் கேட்பதை செய்து தர நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
அமைச்சர் நேரு தேர்தல் அறிக்கையில் திருச்சி பிரதானமாக வரவேண்டும் என்றவர் டிஆர்பி ராஜாவை பார்த்து எல்லாருக்கும் எல்லா செய்வாரு, திருசிக்கலாம் வருவார் ஆனா திருச்சிக்கு மட்டும் ஒன்னும் செய்ய மாட்டார் என்று கலாய்த்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர், கனிமொழி எம்பி பேசியதாவது; அவர் எங்கு இருக்கிறாரோ அதுதான் பிரதானமாக இருக்கும். திமுகவின் தேர்தல் அறிக்கை அனைவரும் எதிர்பார்க்கும் அறிக்கை. அதில் வெளியிடப்படும் வாக்குறுதி நிறைவேற்றித் தரப்படும் என அனைவருக்கும் தெரியும். ஊடகம், மக்கள், அமைப்புகள் என அனைவரது கோரிக்கையும் உருவாக்கப்படும். மக்கள் தேர்தல் அறிக்கையாக உருவாக்க வேண்டும் என முதல்வர் எங்களை பணித்துள்ளார்.
அமைச்சர் உள்ளிட்ட அனைவரது கருத்துகளும் எடுத்துக் கொண்டு எதெல்லாம் சாத்தியமோ அதை ஏற்று இணைத்துக் கொள்வோம். திமுக தேர்தல் அறிக்கை (டிஎன் மேனிஃபெஸ்டோ) போர்ட்டலில் கருத்துக்களை எழுதலாம். திமுக பாரம்பரியமிக்க இயக்கமாக இருந்தாலும் புதிய கண்டுபிடிப்புகளையும் இணைத்து எதிர்காலத்துக்கு தயாராக இருக்கும் இயக்கம். நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய, புதுமைகளை கொண்ட தேர்தல் அறிக்கையாக இருக்கும் என்று எம்.பி கனிமொழி தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கைக்குழு உறுப்பினர்கள் வெளியீட்டுச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், அமைச்சர்கள் கோவி.செழியன், டிஆர்பி ராஜா, தமிழரசி ரவிக்குமார், அப்துல்லா, கான்ஸ்டைன்டன் ரவி, டாக்டர் எழிலரசன், கார்த்திகேயன், சிவசேனாதிபதி, சந்தானம், சுரேஷ் சம்பந்தம் ஆகியோரிடம் மனுக்கள் வழங்கினர்.
இந்த கூட்டத்தில் மேயர் அன்பழகன், அமைச்சர்கள் ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ் உள்பட திமுக உறுப்பினர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.
முன்னதாக, திமுக சார்பில் வெளியாகும் தேர்தல் அறிக்கையில் திருச்சி 2வது தலைநகராக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் திருச்சியில் அரசு துறை சார்ந்த பல்வேறு அலுவலகங்கள் வரும். அதுமட்டுமின்றி வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். மேலும், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி நாகர்கோயில் மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் சென்னை நோக்கி செல்ல வேண்டி இருக்காது. திருச்சியிலேயே பிரச்சனையை தீர்த்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0