தீபாவளியன்று திருச்சியில் மூன்று பேர் உள்பட 11 பேர் படுகொலை; குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைப்பு  

Nov 9, 2026 - 11:39
Nov 9, 2026 - 11:40
 0  130
தீபாவளியன்று திருச்சியில் மூன்று பேர் உள்பட 11 பேர் படுகொலை; குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைப்பு  

தீபாவளியன்று திருச்சியில் மூன்று பேர் உள்பட 11 பேர் படுகொலை; குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைப்பு  

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறில் தனியார் ஐடி நிறுவன ஊழியர் ஸ்பேனரால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கிறிஸ்டோபர் (20), தீபாவளி விடுமுறைக்காகச் சொந்த ஊரான புறத்தாக்குடிக்கு வந்திருந்தார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் அவர் நடுத்தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மேலத் தெருவைச் சேர்ந்த டொனால்ட், எடிசன் மற்றும் சார்லஸ் ஆகியோர் தங்கள் மீது பட்டாசு விழுவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த டொனால்ட் அங்கிருந்த இரும்பு ஸ்பேனரை எடுத்து கிறிஸ்டோபரின் நெஞ்சிலும், அவரது நண்பர் ரஞ்சித்தின் முகத்திலும் சரமாரியாகக் குத்தியுள்ளார். படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, கிறிஸ்டோபர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரஞ்சித் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்துச் சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள டொனால்ட் உள்ளிட்ட மூன்று பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிறார்கள் படுகொலை; சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராகுல் (17) மற்றும் ராஜாவின் மகன் விஷால் (17). உறவினரான இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகிலுள்ள புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரம் இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவர்களைப் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளது. இத்தாக்குதலில் விஷால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ராகுலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது அவரும் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சமயபுரம் காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் உத்தரவின் பேரில், குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கொலை பழிக்குப்பழியா அல்லது முன்விரோதமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை அதிகாரி கொலை ; தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர் 55 வயதான செந்தில்குமார். கடந்த 1995-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை பணியில் சேர்ந்த இவர், சிறப்பு சார்பு ஆய்வாளராகப் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இதையடுத்து சமீப நாட்களாகத் தேனி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்த இவர், தீபாவளி பண்டிகை தினமான நேற்றிரவு பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் அல்லிநகரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் தாக்கியதில் சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் பலியானார்.

முன்னதாக, தீபாவளி தினத்தன்று மட்டும் தமிழகத்தில் திருச்சி, பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, கள்ளக்குறிச்சி கடலூர், தேனி மாவட்டங்களில் காவல்துறை உயர் அதிகாரி உள்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தப் படுகொலைகளுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். கொலை குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0