கோரிக்கையோடு வந்தவர் மீது கொலை வெறி தாக்குதல் ; தொடர் சர்ச்சையில் சிக்கும் துணை சபாநாயகர்; கண்டுகொள்ளாத முதல்வர் 

Nov 9, 2026 - 13:18
 0  52
கோரிக்கையோடு வந்தவர் மீது கொலை வெறி தாக்குதல் ; தொடர் சர்ச்சையில் சிக்கும் துணை சபாநாயகர்; கண்டுகொள்ளாத முதல்வர் 

கோரிக்கையோடு வந்தவர் மீது கொலை வெறி தாக்குதல் ; தொடர் சர்ச்சையில் சிக்கும் துணை சபாநாயகர்; கண்டுகொள்ளாத முதல்வர் 

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன் பகுதி குறைகளைத் தெரிவிக்க வந்த கார்த்திக் குமார் என்பவரையும் உடன் வந்த நிருபரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக் குமார், தனது பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்றும், குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இருப்பினும், நகராட்சி தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தொகுதி சட்டமன்ற உறுப்பினரான துணை சபாநாயகர் ரவிசங்கரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தீபாவளி நாளான நேற்று அவசர வேலை காரணமாக மண்ணச்சநல்லூர் பகுதிக்கு வந்த கார்த்திக்குமார், அங்குள்ள துணை சபாநாயகரின் வீட்டின் அருகே அவரை நேரில் சந்தித்து தன் பகுதிப் பிரச்சனைகள் குறித்து முறையிட்டுள்ளார். அப்போது, பொதுமக்கள் மத்தியில் கார்த்திக் குமாரைத் தகாத வார்த்தைகளால் பேசிய துணை சபாநாயகர், அவரைச் சரமாரியாகத் தாக்கி எட்டி உதைத்து விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான கார்த்திக் குமார், "நான் தளபதிக்குத் தான் வாக்களித்தேன்" எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பெயரைப் பலமுறை உச்சரித்தும், அத்தாக்குதல் தொடர்ந்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவத்தில் காயமடைந்த கார்த்திக் குமார், மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலை வீடு திரும்பினார்.

இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன், "துணை சபாநாயகரைச் சந்திக்கச் சென்ற துறையூர் கார்த்தியை கண்மூடித்தனமாகத் தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரின் செயல் கண்டிக்கத்தக்கது. பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவர் பொதுமக்களில் ஒருவரை இப்படித் தாக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடம் துணை சபாநாயகர் இதுபோன்று அடாவடியில் ஈடுபட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனிடையே, சம்பவம் தீவிரமடைந்ததை அறிந்த துணை சபாநாயகரின் ஆதரவாளர்கள் இரவோடு இரவாக மருத்துவமனைக்குச் சென்று சம்மந்தப்பட்ட நபரிடம் சமாதானம் பேசியதாகவும், இச்சம்பவம் தவறுதலாக நடந்த ஒன்று என விளக்கமளித்து சமரசம் செய்து அவரை வீட்டுக்கு கொண்டு சென்று சேர்த்ததாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

 மேலும் இன்று காலை துணை சபாநாயகர் ரவிசங்கர் சம்பந்தப்பட்ட கார்த்தியை சந்தித்து மீடியாக்கள் முன்பு மேற்கண்ட சம்பவமே நடைபெறாதவாறு பேச வைத்து பேட்டி கொடுக்க வைத்தார்.

 முன்னதாக துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக துணை சபாநாயகருமான ரவிசங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டு வாசலில் யாரும் இங்கு என்னை சந்திக்க வர வேண்டாம் என்று பேனர் வைத்து பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில் மீண்டும் பொதுமக்களில் ஒருவரை தரக்குறைவாக பேசி கண்மூடித்தனமாக தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் ஆக்கிரமித்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கும் தமிழகத்தின் மிக உயரிய பதவியில் இருக்கும் துணை சபாநாயகரை காக்கும் விதமாகவே தமிழக முதல்வர் ஜோசப் விஜய் செயல் படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0