விஜய்யின் புதுக்கோட்டை பயணம் ஏமாற்றம்; விராலிமலையில் விஜயபாஸ்கர் விசிலுடன் பணப்பட்டுவாடா: முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு
விஜய்யின் புதுக்கோட்டை பயணம் ஏமாற்றம்; விராலிமலையில் விஜயபாஸ்கர் விசிலுடன் பணப்பட்டுவாடா: முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்கூட்டியே தேர்தல் பணப் பட்டுவாடாவைத் தொடங்கிவிட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதலமைச்சர் சென்றது குறித்தும், அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதலமைச்சர் வருகை தந்த போது, அப்பகுதி மக்கள் புதிய திட்டங்கள் பல அறிவிக்கப்படும் என்று மிகுந்த ஆவலுடன் காத்திருந்ததாகவும், ஆனால் எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்றும் ரகுபதி குற்றம் சாட்டினார். ஜோசியர் சொன்னதைக் கேட்டு பிரம்மாண்டமாகப் போடப்பட்ட பந்தலைத் தவிர்த்துவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கலைஞர் கருணாநிதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் அன்றைய தினம் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வு, முதலமைச்சரைப் பார்ப்பதற்காக மட்டும் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும், ஆனால் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதிய பேருந்து நிலைய திறப்பு விழாவில் புதிய வழித்தடங்கள் அல்லது நலத்திட்ட உதவிகள் ஏதும் வழங்கப்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும், பாதுகாப்பு மற்றும் பந்தல்களுக்காக மக்களின் பொதுப் பணம் பெருமளவில் விரயமாக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், விராலிமலை தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீபாவளியை முன்னிட்டு விராலிமலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள், ரசகுல்லா டின் மற்றும் தலா ரூ. 2,000 மதிப்பிலான பொருட்களை முதல் கட்டமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிலருக்கு ரொக்கப் பணமும் கொடுக்கப்பட்டு வருகின்றது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, இப்போதே தேர்தல் பட்டுவாடா தொடங்கிவிட்டது.
விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் பால் தட்டுப்பாடு ஆகியவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அரசுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை எனவும் ரகுபதி தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் வருகையை ஒட்டி பேருந்து நிலையப் பகுதியிலுள்ள கடைகள் மூடப்பட்டதாகவும், திமுக அலுவலகத்திற்கு அருகில் இனிப்பு வழங்க ஏற்பாடு செய்திருந்தவர்களைக் காவல்துறை தடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0