காவிரியில் 50 சதவீத கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றுகிறோம் என்ற கர்நாடக அமைச்சர் பேச்சுக்கு பிஆர் பாண்டியன் கண்டனம்

Sep 16, 2026 - 18:57
 0  28
காவிரியில் 50 சதவீத கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றுகிறோம் என்ற கர்நாடக அமைச்சர் பேச்சுக்கு பிஆர் பாண்டியன் கண்டனம்

காவிரியில் 50 சதவீத கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றுகிறோம் என்ற கர்நாடக அமைச்சர் பேச்சுக்கு பிஆர் பாண்டியன் கண்டனம்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் மதுரை அருகே விரகனூர் மதகு அணையிலிருந்து வைகை ஆறு வறண்டு கிடப்பதை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது:

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இருபோக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.ஒருபோக சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளது.

ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் மதுரை மாவட்டங்களில் நேரடி விதைப்பு செய்வதற்கு கோடை உழவு செய்து காத்துள்ளனர்.பல இடங்களில் விதைத்து முளைக்காததை பார்த்து விவசாயிகள் மனமுடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழையில் வைகை அணை நிரம்புமா ? என்கிற கேள்வி எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் உள்ளடக்கிய மண்டலத்தை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து வறட்சி நிவாரண பணிகளை தமிழக அரசு துவக்கிட வேண்டும்.

மதுரை மாநகராட்சியின் கழிவுநீர் வைகையில் கலப்பதை தடுத்து நிறுத்த முன் வர வேண்டும்.

வைகை அணை தூர்வாரி நீர் கொள்ளளவை உயர்த்த வேண்டும். வைகை நதி முழுமையாக தூர்வாரப்பட வேண்டும். கருவேல மரங்கள் புதர் போல மண்டி பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் உள்ள நீர் இருப்பு குடிதண்ணீருக்கு கூட 90 நாட்களுக்கு போதுமான அளவில் இல்லாதது அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கால்நடைகளுக்கு தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் கூட கிடைக்கவில்லை.

தற்போதைய நிலையில் சூப்பர் எல்நினோ தாக்குதல் தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. வரும் 2027 ஆம் ஆண்டு மிகப்பெரிய ப வறட்சி ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மதுரை மண்டலத்தில் தற்போதைய நிலையில் ஏரிகள் குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. இந்நிலையில் உரிய அவசரகால நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்க்கொண்டு

நீர்நிலைகளை தூர்வாரி நீர் சேமிப்பை உயர்த்த வடகிழக்கு பருவமழை காலத்தில் நடவடிக்கைகளை மேற்க்கொள்ள முன்வர வேண்டும்.

முல்லைப் பெரியாருக்கு மாற்றாக புதிய அணை தமிழக எல்லையில் கட்டி கொள்வதற்கு கேரளம் நிதி உதவி செய்யும் என மாநில முதலமைச்சர் சதீசன் கூறுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முன்வர வேண்டும்.

கர்நாடகாவின் கழிவு நீர் 50 சதவீதம் சுத்திகரிக்காமலேயே காவிரி நதியில் வெளியேற்றுவதாக அம்மாநில அமைச்சர் ராமலிங்கராஜு வெளிப்படையாக தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது, இது குறித்து தமிழக அரசு கர்நாடக அரசின் மீது நீதிமன்றம் மூலமாக உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். 

தமிழகத்தில் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் காவிரியில் 50 சதவீத கழிவுநீரை கர்நாடகம் கலக்கச் செய்வதால் மிகப் பெரும் பேராபத்து ஏற்படும் நிலை உள்ளது. நிலத்தடி நீர் பறிபோகும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. குடிக்கும் தண்ணீர் விஷமாக மாறி வருகிறது என்பதை உணர்ந்து தமிழக அரசு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் எடுத்துரைக்க வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் இணைந்து ஏற்கனவே திட்டமிடப்பட்ட நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்.

 இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க செயலாளர் எல்.ஆதிமூலம்,மாநில இளைஞரணி செயலாளர் மேலூர் அருண் உயர்மட்ட குழு உறுப்பினர் பா அசோகன், மதுரை நிர்வாகிகள் செல்லம் குணசேகரன்,கோட்டூர் ஒன்றிய செயலாளர் தெய்வமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1