குழந்தைகள் வளர்ச்சி மையம் அருகே சுகாதார சீர்கேடு ; தொற்றுநோய் பரவும் அபாயம்; கண்டு கொள்ளுமா மாநகராட்சி
குழந்தைகள் வளர்ச்சி மையம் அருகே சுகாதார சீர்கேடு ; தொற்றுநோய் பரவும் அபாயம்; கண்டு கொள்ளுமா மாநகராட்சி
திருச்சி மாநகராட்சி மண்டலம் இரண்டிற்குட்பட்ட 34 வது வார்டு துரைசாமிபுரம் பிரதான சாலையில் குழந்தைகள் வளர்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்தக் குழந்தைகள் வளர்ச்சி மையம் எதிரே குழந்தைகளுக்கு சுகாதார சீர்கேடை உருவாக்கும் வகையில் இந்த பகுதியின் சாலையோரத்தில் சிலர் வீடுகளில் உள்ள குப்பைகளை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், அந்தபகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
இது குறித்து சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள பொதுமக்கள் புகார் அளித்ததின் பேரில் பெயரளவிற்கு சுத்தம் செய்தார்களே தவிர, அப்பகுதியில் நிரந்தரமாக குப்பை கொட்டாமல் இருக்க எவ்வித நடவடிக்கையும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் வளர்ச்சி மையத்தை புனரமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர் மோகன் என்பவர் ஈடுபட்டார். ஆனால் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடையவில்லை, குழந்தைகள் வளர்ச்சி மையத்தின் உள்ளே உள்ள கழிவறையை இடித்துவிட்டு இதுவரை சீரமைத்து தரவில்லை. இதனால் அங்குள்ள குழந்தைகள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
மேலும் சீரமைப்பு பணிகளுக்காக சாலையில் கொட்டப்பட்ட மணல் தேவை போக மீதம் அப்படியே அல்லப்படாமல் உள்ளது. மேலும் சீரமைப்பு பணியின்போது இடிக்கப்பட்ட தேவையற்ற பொருட்களும் மையத்தின் அருகே அல்லப்படாமல் அப்படியே உள்ளது.
அதே நேரம் பணிகள் முடிந்து விட்டதாக கணக்கு காட்டி அதற்குரிய தொகையை வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வளவு இன்னல்களுக்கு இடையே கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு மாநகராட்சி 34 வது வார்டு மேற்பார்வையாளர் முருகானந்தம் மேற்பார்வையில் குழந்தைகள் வளர்ச்சி மையத்தின் பின்புறம் உள்ள சமையலறை அருகே மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூடி இருந்த சாக்கடையை திறந்து சுத்தம் செய்கிறேன் என்று பெயரில் சாக்கடையில் உள்ள மண்களை அப்படியே அங்கேயே கொட்டி விட்டு கழிவுநீர் வடிகாலையும் மூடாமல் சென்று விட்டார்கள். இதுவரை அந்தக் கழிவு மண்களை அல்லவே இல்லை, இதனால் அப்பகுதியில் மேலும் குப்பைகள் சேர தொடங்கியுள்ளன.
இது குறித்து 34 வது வார்டு மேற்பார்வையாளர் முருகானந்தத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கையில் அதை நீங்களே மூடி விடுங்கள் என்று அலட்சியமான பதிலை தெரிவித்துள்ளது வேதனை என்கின்றனர் அப்பகுதியினர். 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலும் மையத்தின் சமையல் கூடம் அருகே அருகே குப்பைகள் மற்றும் சாக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மையத்திற்கு அனுப்ப அச்சப்படுகின்றனர்.
எனவே, உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் குழந்தைகள் வளர்ச்சி மையத்தை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றி மையத்தின் எதிர்ப்புறம் நிரந்தரமாக பொதுமக்கள் குப்பை கொட்டா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
குறிப்பாக 34வது வார்டு மேற்பார்வையாளர் முருகானந்தம் மென்று துப்பும் வெற்றிலை எச்சியை சுத்தப்படுத்துவதற்கே தனியாக ஒரு ஆள் நியமிக்கும் சூழ்நிலை உள்ளது. மேலும் எந்த ஒரு பணியையும் அவர் முழுமையாக செய்யாமல் கடமைக்கு செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனே தலையிட்டு இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0