ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் "ரங்கா ரங்கா" கோஷம் விண்ணதிர விருப்பன் தேரோட்டம் கோலாகலம்

May 14, 2026 - 10:56
May 14, 2026 - 11:23
 0  35
ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் "ரங்கா ரங்கா" கோஷம் விண்ணதிர விருப்பன் தேரோட்டம் கோலாகலம்

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ரங்கா ரங்கா கோஷம் விண்ணதிர விருப்பன் தேரோட்டம் கோலாகலம்   

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், "பூலோக வைகுண்டம்" என்று பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழாவின் 9ம் நாளான இன்று (14.05.2026) அதிகாலை ஸ்ரீ நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பக்திப் பெருக்குடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க ரங்கா ரங்கா, கோவிந்தா கோவிந்தா கோஷம் விண்ணதிர, விஜயநகர வம்சத்தினர் காலத்திலிருந்தே நடைபெறும் 'விருப்பன் திருநாள்' அழைக்கப்படும் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவையொட்டி தினமும் காலையிலும், மாலையிலும் ஒவ்வொரு வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.

அந்த வகையில் விழாவின் 8-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் ரெங்கவிலாச மண்டபத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி, இரவு 9 மணியளவில் கண்ணாடி அறையை அடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

விருப்பன் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டத்திற்காக ஸ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைந்தார். பின்னர் 4.45 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார்.

சிறப்பு பூஜைகளுக்குப் பின் இன்று காலை 6 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘ரங்கா ரங்கா’ என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

திருத்தேர் 4 சித்திரை வீதிகளிலும் வலம் வலம் வந்து நிலையை வந்தடைந்தது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் 500-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 16-ம் தேதி ஆளும் பல்லக்குடன் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.

விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருநாள் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதும், இந்த ஆண்டு, 3500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு டேங்கர் லாரிகளில் குளிரூட்டப்பட்ட மூலிகை நீர்மோர் வேதாபால் மற்றும் ஜிஆர்பி நெய் நிறுவனங்கள் சார்பில் தேரோடும் வீதிகளில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1