லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டையில் சிக்கிய திருச்சி டான்சிட்கோ கிளை மேலாளர் கைது
லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டையில் சிக்கிய திருச்சி டான்சிட்கோ கிளை மேலாளர் கைது
திருச்சி அண்ணாநகரில் வசித்து வரும் முரளி என்பவர் தனது தாயார் கமலா பெயரில் சத்து மாவு தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
அதன்படி, இந்த நிறுவனத்திற்கு டான்சிட்கோ மூலம் திருச்சி கும்பக்குடியில் உள்ள டான்சிட்கோவிற்கு சொந்தமான இடத்தில் பிளாட் எண் 3 என்ற பிளாட் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திற்குப் பத்திரப்பதிவு செய்து கொடுக்க ரூ.20 ஆயிரத்தைத் திருச்சி டான்சிட்கோ கிளை மேலாளர் சத்தியராஜ் என்பவர் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத முரளி, இன்று (08.05.2026) திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் ஆஜராகி புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவல் ஆளினர்களுடன் இன்று மதியம் இரசாயன பவுடர் தடவிய பண நோட்டுகளை, புகார்தாரர் முரளி மூலம் திருச்சி டான்சிட்கோ நிறுவன கிளை மேலாளர் அலுவலகத்திற்கு அனுப்பிப் பொறி வைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது சத்தியராஜ், புகார்தாரர் முரளியிடம் இருந்து பவுடர் தடவப்பட்ட லஞ்ச பணம் ரூ.20 ஆயிரத்தைக் கேட்டுப் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து அவரிடம் அவரது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0