கிராமசபை கூட்டம் நடத்தி மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன் - ப.குமார்
கிராம சபை கூட்டம் நடத்தி மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன் - ப.குமார்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராக களம் இறங்கி இருக்கும் அதிமுக வேட்பாளர் ப.குமார் தொண்டர்களுடன் பேரணியாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார், தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பிரச்சார வேனில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கட்சி தொண்டர்கள் புடை சூழ பேரணியாக வந்து திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் ப.குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது;
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கிராமப்புறங்களில் கிராம சபை கூட்டம் நடத்தி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் அடிப்படை வசதிகள், வளர்த்திட்டங்களை செய்து கொடுப்பது எனது முதல் நோக்கமாகும்.
ஏற்கனவே திமுக ஆட்சியில் இந்த பகுதி மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததால் மக்கள் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர். மக்களின் மனநிலை திமுக ஆட்சிமீதும், தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடியவர் மீதும் எப்படி உள்ளது என்பதை நான் கண்கூடாக அறிந்து கொண்டேன். நிச்சயம் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவர் என்ற எதிர்பார்ப்பில் நான் மக்களை சந்தித்து வருகிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக நான் மக்களுக்காக செயல்படுவேன்
கடந்த நான்கு நாட்களாக நான் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது மக்கள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக காவிரி கரையில் அமைந்திருக்க கூடிய திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கு அடிப்படை பிரச்சனையாக காவிரி குடிநீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை என்னிடம் தெரிவித்தனர். நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு கிராமமாக சென்று கிராம சபை கூட்டம் நடத்தி மக்களின் அடிப்படை அத்தியாவசிய பிரச்சனைகளை கேட்டு அவர்களது பிரச்சனையை தீர்த்து வைப்பேன்.
இந்த தொகுதியில் ஏற்கனவே இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் முறையிட்டு தீர்வு காணாத அத்தனை பிரச்சனைகளையும் ஆறு மாதத்திற்குள் நான் தீர்த்து வைப்பேன்.
பால்பண்ணை துவாக்குடி வரை சர்வீஸ் ரோடு அமைப்பது குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் சிறப்பான திட்டத்தை செயல்படுத்த முன்னெடுப்போம். அரியமங்கலம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரியமங்கலம் குப்பைக்கிடங்கை முற்றிலுமாக அகற்றுவோம், இந்த குப்பைக் கிடங்கினால் அந்தப் பகுதியில் துர்நாற்றம், அவ்வப்போது புகைமூட்டம் காரணமாக மூச்சுத் திணறல், நிலத்தடி நீர் வளம் பாதிப்பு என பல்வேறு பிரச்சனைகளை தினம் தோறும் அப்பகுதி மக்கள் எதிர்கொள்வதால் அதிமுக ஆட்சி அமைந்த உடன் முதல் வேலையாக குப்பை கிடங்கை முற்றிலும் அகற்றுவேன் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது கூட்டணி கட்சியினர் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0