விஜய்க்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு; பொதுமக்களை சந்திக்கும் முன்பே சலசலப்பில் சிக்கிய தவெக
விஜய்க்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு; பொதுமக்களை சந்திக்கும் முன்பே சலசலப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தவெக தலைவர் தனது பிரசார பயணத்தை துவக்கியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய் பெரம்பூரில் கடந்த 30ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்து பிரச்சாரத்தை துவக்கினார்.
திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்த விஜய் இன்று காலை 10:40 மணி அளவில் சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக கார் மூலம் ரோடு ஷோவாக வருகை தந்தார். விமான நிலையத்திலிருந்து பாலக்கரை வரை செல்லும் சாலைகளில் விஜயை காண பெண்கள் குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். தவெக நிர்வாகிகள் அறிவுறுத்தியும் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் பொதுமக்கள் ரசிகர்கள் ஆரவார வரவேற்பை கொடுக்க பிரச்சார வாகனத்தில் எழுந்து நின்று கையசைத்தவாறு வேட்பு மனு தாக்கல் செய்ய பயணமானார். திருச்சி விமான நிலையத்திலிருந்து பாலக்கரை வருவதற்கு 12 மணியை கடந்தது.
திருச்சி மேலப்புதூர் பாலம் அருகே விஜய் வாகனத்திற்கு முன்னால் ஸ்கூட்டியில் சென்ற பெண் வாகனத்தில் இன்னொரு இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. காவல்துறை வாகனமும் அந்த வாகனத்தை உரசியது.
இதை பார்த்த விஜய் பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி அந்தப் பெண்ணிடம் நலம் விசாரித்து மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தார் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு மரக்கடை பகுதியில் திருச்சி மாவட்டத்தில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் விஜய்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் விஜய் வருகையை படம் எடுக்கவும் காணொளி பதிவிடவும் காத்திருந்தனர். அந்த சமயத்தில் விஜய் பாதுகாப்புக்காக வந்த தனியார் பவுன்சர்கள் விமான நிலையத்திற்கு உள்ளேயே திடீரென பாதுகாப்பு வளையங்கள் வைத்து பத்திரிக்கையாளர்களை தடுத்தனர். இதனால் பத்திரிகையாளர்களுக்கும் பவுன்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் தலையிட்டு சமரசம் செய்தனர். விஜய் திருச்சி வந்து பொதுமக்களை சந்திக்கும் முன்பே சலசலப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
1
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
0