ஏப்ரல் 2 திருச்சியில் விஜய்; பிரச்சாரத்திற்கு அனுமதி கிடைக்குமா?

Mar 31, 2026 - 16:42
 0  37
ஏப்ரல் 2 திருச்சியில் விஜய்; பிரச்சாரத்திற்கு அனுமதி கிடைக்குமா?

ஏப்ரல் 2 திருச்சியில் விஜய்; பிரச்சாரத்திற்கு அனுமதி கிடைக்குமா?

தவெக தலைவர் விஜய், நேற்று (30ஆம் தேதி) தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் அடுத்து அவர் தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பெரம்பூரில் தனக்கும், கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் பாபுவுக்கும் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனையடுத்து வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு அனுமதியும் பெறப்பட்டிருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் தனக்கும், பொதுமக்களுக்கும் போதுமான பாதுகாப்பு இல்லை எனக் கூறி தனது வில்லிவாக்கம் பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்தார்.

பெரம்பூர் தொகுதியில் ஏற்கனவே விஜய் மனுத்தாக்கல் செய்துவிட்ட நிலையில் வரும் 2 ம் தேதி திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக 2ம் தேதி காலை விமானம் மூலம் திருச்சி வரும் விஜய், திருச்சி மாநகராட்சி மண்டலம் இரண்டு 2 அலுவலகத்தில் மனு தாக்கல் செய்கிறார்.

அதனைத் தொடர்ந்து பாலக்கரை, மரக்கடை, கே.கே. நகர் உள்ளிட்ட நான்கு இடங்களில் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அனுமதி கோரி செங்கோட்டையன் மற்றும் திருச்சி டெல்டா மண்டல தேர்தல் பொறுப்பாளர் கு.ப.கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை ஆணையர் காமினியிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை ஆணையர் மாலை தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

விஜய் குறிப்பிட்டிருக்கும் சில இடங்கள் குறுகலான இடம் என்பதால் காவல்துறையின் அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இருந்தாலும் விஜய் திருச்சி வருகையை முன்னிட்டு விஜய் ரசிகர் மன்றத்தினர், தவெக நிர்வாகிகள் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

அதேநேரம் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது; திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, அன்றைய தினம் பிரச்சாரத்தைத் தொடங்க தவெக திட்டமிட்டுள்ளது. எனினும், திருச்சி காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. விஜய் ரோடு ஷோ (வாகனப் பேரணி) மேற்கொள்ளக் கூடாது என்றும், பிரச்சாரம் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மட்டுமே பிரச்சாரம் அனுமதிக்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

 தவெக தரப்பு, பாதுகாப்பு கோரி ஏற்கனவே மனு அளித்திருந்த நிலையில், காவல்துறையின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பிரச்சாரத்தை மேற்கொள்ள தவெக தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0