முறைகேடாக செயல்பட்ட குவாரியை படம்பிடித்த செய்தியாளர்கள் மீது எம்.ஏல்.ஏ பழனியாண்டி கொலைவெறித் தாக்குதல்; திருச்சி முன்னாள் எம்.பி.கடும் கண்டனம்

Jan 31, 2026 - 12:24
 0  111
முறைகேடாக செயல்பட்ட குவாரியை படம்பிடித்த செய்தியாளர்கள் மீது எம்.ஏல்.ஏ பழனியாண்டி கொலைவெறித் தாக்குதல்; திருச்சி முன்னாள் எம்.பி.கடும் கண்டனம்

பழனியாண்டி எம்.ஏல்.ஏவின் அடாவடி செயல்; முறைகேடாக செயல்பட்ட குவாரியை படம்பிடித்த செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்; திருச்சி முன்னாள் எம்.பி.கடும் கண்டனம்

 

 கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா சிவாயம் பகுதியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மகன் விமல் ஆதித்தன் நடத்தும் கல்குவாரி செயல்பட்டு வருகின்றது. இந்த குவாரி அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமல் அளவுக்கு அதிகமாக கல் தோண்டி எடுப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நியூஸ் தமிழ் திருச்சி மண்டல செய்தியாளர் கதிரவன், கேமராமேன் செபாஸ்டின், சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு, வழக்கறிஞர் திருமலை ராஜன், உதவியாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட 5 பேர் ஒரு கார் மூலம் குவாரிக்கு சென்றுள்ளனர்.

 

குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலையில் இருந்து ட்ரோன் கேமரா மூலம் குவாரியின் முழு பகுதிகளை முழுவதுமாக கவர் செய்து வீடியோ, போட்டோ எடுத்துள்ளனர். நெடுஞ்சாலைக்கும், குவாரிக்கும் இடையே 8 கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது. அப்போது, அந்த ட்ரோன் பறந்து கொண்டு வருவதைப் பார்த்த ஒருவர் மூலமாக, குவாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்து கிளம்பி வந்த 50-க்கும் மேற்பட்ட நபர்கள், அவர்களை கடுமையாகத் தாக்கி அவர்கள் கைவசம் வைத்திருந்த 2 கேமராக்கள், ட்ரோன் ஆகியவற்றையும் சுக்குநூறாக அடித்து உடைத்ததோடு, அவர்களை மணப்பாறைக்கு கடத்தியதாகவும், குவாரியில் தனி அறையில் அடைத்ததாகவும் கூறப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பழனியாண்டி சுமார் 50 அடியாட்களை வைத்து தாக்குதல் நடத்த வைத்ததாகக் காயமடைந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக செய்தியாளர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் இருந்தது.

 

இந்த தகவலை அறிந்த திருச்சி மாவட்டத்திலுள்ள பல்வேறு செய்தியாளர்கள் குளித்தலை விரைந்தனர். குளித்தலை காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் சென்று முறையிட்டனர். ஆய்வாளர் கருணாகரன் என்பவரோ எதுவும் நடக்காததுபோல் செய்தியாளர்களை ஒருமையில் பேசியுள்ளார்.

   இது குறித்து கரூர் மாவட்ட எஸ்.பி ஜோஸ் தங்கையா உத்தரவின் பெயரில், குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் குவாரி பகுதிக்கு விரைந்து சென்றபோது ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் அடியாட்கள் பிடியில் இருந்த செய்தியாளர்களை மீட்டு, குளித்தலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

   

மேலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர் திருமலை ராஜன், உதவியாளர் ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்பு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். 

  குளித்தலை காவல் நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை விசாரணை செய்த போலீஸார், செய்தியாளர்கள் கொடுத்த புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகின்றது. திருச்சி மற்றும் கரூர் செய்தியாளர்கள் பேசிப்பார்த்தும் ஆய்வாளர் கருணாகரன் கண்டுகொள்வதாக இல்லை என்றும் நடக்கமுடியாத நிலையில் தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர்களை கூட்டிச்செல்லுங்கள் எனவும் கராராக பேசியிருக்கின்றார். பின்னர் ஒருவழியாக ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்த அனைவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது செய்தியாளர்கள் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர்.

 

இந்நிலையில், செய்தியாளர் மற்றும் கேமராமேனை தாக்கிய எம்.எல்.ஏ பழனியாண்டி மற்றும் அவரது மகன் தரப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

  இதுகுறித்து தமது கண்டனத்தை பதிவு செய்த திருச்சி முன்னாள் எம்.பி.யும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக நடைபெற்று வந்த கனிமவள கொள்ளை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற, திருச்சியை சேர்ந்த நியூஸ் தமிழ் செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோர் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர் என்கிற செய்தி மிகுந்த கண்டனத்திற்கு உரியதாகும். 

   விடியா திமுக அரசின் சர்வாதிகார போக்கினால் அதன் நிர்வாகிகள் கொஞ்சமும் அச்சமில்லாமல் செய்தியாளர்களை உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் தாக்கி இருப்பது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்க கூடிய ஊடக துறைக்கு பெரும் அச்சுறுத்தலாகும். இக்கொடூர நிகழ்வினை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அனைதிந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் எனத் தெரிவித்திருந்தார்.

   இதேபோல், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை, பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

  இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர் கதிர்வன் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாருக்கு எதிர் புகாராக பழனியாண்டி மகன் விமலாதித்தன் சார்பில் செய்தியாளர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த குவாரி முறைகேடாக செயல்பட்டு வருவதாக ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.பழனியாண்டி குவாரிக்கு ரூ. 23.25 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அந்த குவாரி மீண்டும் முறைகேடாக செயல்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0