சாக்கடையில் விழுந்த வாலிபர் பலி; அம்பிகாபுரத்தில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Jan 23, 2026 - 11:53
Jan 23, 2026 - 12:31
 0  192
சாக்கடையில் விழுந்த வாலிபர் பலி; அம்பிகாபுரத்தில்  வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சாக்கடையில் விழுந்த வாலிபர் பலி;
வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


   திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பிகாபுரம் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் சாக்கடையில் விழுந்து பலி. சாக்கடையில் விழுந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த விபரம் வருமாறு;
   திருச்சி அரியமங்கலம் எஸ்ஐடியில் இருந்து அம்பிகாபுரம் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் இருசக்கர வாகனத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அரியமங்கலம் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கர்நாடக மாநிலம் பெங்களூர் சிக்கண்ணா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் அம்ஜத் அலி. இவர் அரியமங்கலத்தில் தங்கியிருந்து தினக்கூலி அடிப்படையில் பல்வேறு இடங்களுக்கும் சென்று வேலை பார்த்து வந்திருக்கின்றார்.
   மேலும், இவர் அம்பிகாபுரம் பகுதியில் இருந்து தஞ்சாவூர் சாலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தபோது  நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாக்கடையில் விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட அம்ஜத் அலி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். 
   இந்த விபத்து இரவு நேரத்தில் நடந்திருப்பதாலும், சாக்கடை பள்ளம் சுமார் 7 அடியாக இருந்ததால் யாருடைய பார்வையிலும் இவர் தென்படவில்லை. காலை நேரம் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் அரிசி ஆலை பணியாளர்கள் சாக்கடையில் இருசக்கர வாகனம் விழுந்து கிடப்பதை பார்த்தபோது வாகனத்தையொட்டி அடையாளம் தெரியாத நபர் சாக்கடையில் மூழ்கி இறந்து கிடந்ததை பார்த்து அரியமங்கலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.   
   இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரியமங்கலம் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அம்பிகாபுரம் வாசிகள் தெரிவிக்கையில்; எஸ் ஐ டி அம்பிகாபுரம் சாலையில் போதிய மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைவதாகவும், தனியார் அரிசி ஆலை இயங்கக்கூடிய பகுதியில் உள்ள வளைவில் எப்போதுமே இருள் சூழ்ந்திருப்பதால் வாகன ஓட்டிகள் தினம் தினம் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்த குறுகிய அகலம் கொண்ட சாக்கடை சுமார் 10 அடி ஆழத்துடன் இருப்பதாலும், திறந்த வெளி சாக்கடையாகவே இருப்பதால் தவறி விழுபவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்றது. 
 

 எனவே, இங்குள்ள வளைவு மற்றும் அம்பிகாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும், மின்விளக்குகளை ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இனிமேலாவது மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு , சாக்கடையை மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
  முன்னதாக, சாக்கடையில் விழுந்து பலியான அம்ஜத் அலிக்கு நூர்தின் என்ற மகனும், லைலா பானு என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 2
Wow Wow 0