ஓபிஎஸ்ஸின் கடைசி நம்பிக்கையும் காலி: ஒரத்தநாடு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வைத்திலிங்கம்

Jan 21, 2026 - 09:36
Jan 21, 2026 - 09:42
 0  67
ஓபிஎஸ்ஸின் கடைசி நம்பிக்கையும் காலி: ஒரத்தநாடு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வைத்திலிங்கம்

ஓபிஎஸ்ஸின் கடைசி நம்பிக்கையும் காலி: ஒரத்தநாடு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வைத்திலிங்கம் 

 

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம், இன்று திமுகவில் இணைவதை முன்னிட்டு தனது எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

ஓபிஎஸ்ஸின் கடைசி நம்பிக்கையும் காலி; முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவில் இடம் பெற்றிருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார். இதனைத் தொடர்ந்து , ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அவரோடு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரும் திமுகவில் இணைய உள்ளனர்.

பதவியை ராஜினாமா செய்த  வைத்திலிங்கத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அவரை திமுகவில் கொண்டு வருவதற்கு பெரும் பங்காற்றியவர் அன்பில் மகேஷ்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், இந்த நிகழ்வு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட பிறகு அவருக்கு ஆதரவாக இருந்தவர்களில் வைத்திலிங்கம் மிக முக்கியமானவராகும். மீண்டும் அதிமுகவில் அவர்களுக்கு வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியதை தொடர்ந்து, வைத்திலிங்கம் விஜய் தலைமையிலான தவெகவில் இணையலாம் என வெளியான தகவலை மறுத்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தற்போது திமுகவில் இணைய உள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் அண்மையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.

கழற்றிவிட்ட பாஜக.. ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து அழுத்தம் கொடுத்து எப்படியும் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிடலாம் அல்லது பாஜக மூலமாவது கூட்டணியில் இணைந்துவிடலாம் என ஓபிஎஸ் தீவிரம் காட்டி வந்தார். ஆனால், டெல்லியின் பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு, அதிமுகவில் ஓபிஎஸ்-க்கு இடமில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதனிடையே, நாளை மறுதினம் 23ம் தேதி மதுராந்தகத்தில் மோடி தலைமையில் நடைபெற உள்ள, தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் மேடையேற்றப்பட உள்ளனர். டிடிவி தினகரனுக்கு கூட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஓபிஎஸ்-ற்கு எந்தவித அழைப்பும் செல்லவில்லையாம். இதனால், இனியும் இங்கு இருந்தால் அரசியலில் எதிர்காலமே இருக்காது என்பதை உணர்ந்தே, வைத்திலிங்கம் திமுகவில் இணைய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

யார் இந்த வைத்திலிங்கம்? மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தளபதிகளில் ஒருவராக வைத்திலிங்கம் அதிமுகவில் வலம் வந்தவர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, 2001-2006 காலகட்டத்தில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும், 2011-2016 காலகட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 

2016 தேர்தலில் தோல்வியுற்ற பிறகு, மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் அவர் வகித்தவர் என்பதும் ஜெயலலிதாவால் சோழமண்டல தளபதி என அழைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0