அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்: வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை அடக்கும் காளையர்கள்!

Jan 15, 2026 - 13:36
 0  19
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்: வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை அடக்கும் காளையர்கள்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்: வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை அடக்கும் காளையர்கள்!

தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டு’ இன்று (ஜன.15) காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. சுமார் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் இதில் களம் கண்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயா, காவல் ஆணையர் லோகநாதன், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதைத்தொடர்ந்து போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் பிரவீன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அவனியாபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களின் காளைகள் முதலாவதாக அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

ஒவ்வொரு சுற்றிலும் 100 காளை அவிழ்க்க இலக்கு நிர்ணயத்து மொத்தம் 12 சுற்றுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் 5 சுற்று முடிவில் 500 காளைகள் அவிழ்க்கபட்டன. வாடிவாசலில் துள்ளி பாய்ந்த காளைகளின் திமில் பிடித்து அடக்கிய வீரர்களுக்கு தங்க காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, மருத்துவ பணியாளர்கள் 40 பேர் என மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

களத்தில் வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேல் சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

காயமடையும் காளை மாடுகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வகையில் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

108 ஆம்புலன்சில் 36 பேர் முதலுதவி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 6 பேர் அனுமதிக்கப்பட்டவர்கள் , 

மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் 5, ஆக மொத்தம் 108 மூலம் பயனடைந்தவர்கள் (மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்) 47 நபர்கள் பயன் அடைந்துள்ளனர். அதைப் போல் காளை ஒன்றும் மயக்கம் அடைந்துள்ளது.

இம்முறை மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை காளைகள் அடக்கினர் என்ற விவரம் டிஜிட்டல் திரை மூலம் ஒளிபரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0