ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறப்பு; யாராலும் திமுக கூட்டணியை அசைக்க முடியாது - அமைச்சர் கே.என்.நேரு
ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறப்பு; யாராலும் திமுக கூட்டணியை அசைக்க முடியாது - அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் இல்லாமல் இருந்து வந்தது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், அங்கு வந்துசெல்லும் ஆன்மிக சுற்றுலா பயணிகளும், ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைத்துதரவேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் மூலதன மானிய நிதியாக 11 கோடியே 10 லட்சம் ரூபாயினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.
அதற்கான கட்டுமான பணிகளை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரே கடந்த 2023ஆம் ஆண்டு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் ஸ்ரீரங்கத்தின் புதிய பேருந்து நிலையத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்து, புதிய பேருந்து நிலையத்தில் முதல் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த கல்வெட்டில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் துரை.வைகோ ஆகியோரது பெயர்கள் இடம் பெறவில்லை.
அங்கு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்; ஸ்ரீரங்கத்திற்கு பேருந்து நிலையம் வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக முதல்வர் சிறப்பு நிதி கொடுத்து நிறைவேற்றி தந்துள்ளார். ஸ்ரீரங்கத்தில் 30 அடி அகலம் கொண்ட சாலையை 50 அடி அகலத்திற்கான சாலையாக திமுக அரசு விரிவாக்கம் செய்துள்ளது.
புதிய பேருந்து நிலையத்திற்குள்ளே ஒருபுறம் பேருந்துகள் நுழைந்து, மறுபுறம் வெளியே வருவதற்கு காவல்துறையினரிடம் பேசி காலப்போக்கில் நடவடிக்கை எடுக்கப்படும். வேறு நெருக்கடி இருந்தால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா கல்வெட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெயர், நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ பெயர்கள் இடம்பெறாததற்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு...
நேற்று ஒருநிகழ்வில் அவர் இல்லாத போதும் அவருடைய பெயர் போடப்பட்டிருந்தது.
இது ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி என்பதால் அதற்கேற்ப கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் யாராலும் திமுக கூட்டணியை அசைத்துக்கூட பார்க்க முடியாது. திமுக கூட்டணியினரை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக கையாண்டு வருகிறார். அவர் என்ன முடிவெடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பொறுத்தவரை, சேருவதும், பிரிவதும், மீண்டும் சேருவதுமாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து இருந்த பொழுது தான் திமுக வெற்றி பெற்றது.
யாருக்கு எந்த தொகுதி ஒதுக்குவது என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார். அவர் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவரை வெற்றி பெற செய்வோம்.
அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை வைப்பது தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளின் வேலை. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது பொங்கல் பரிசு தொகை 5000 வழங்க வில்லை. அவர் ரூ.1000 தான் கொடுத்தார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகி தான் பொங்கல் பரிசு தொகைக்கு நான்காயிரத்துடன் ஆயிரம் ரூபாய் சேர்த்து ஐயாயிரம் ரூபாய் கொடுத்தார். கடந்த முறை கொடுக்கவில்லை. இந்த முறை 3000 ரூபாய் கொடுத்துள்ளோம். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.
அதிமுக அரசால் முடியாததை நாங்கள் செய்துள்ளோம். அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0