ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்; ரங்கா ரங்கா கோஷம் விண்ணதிர்ந்தன
ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்; ரங்கா ரங்கா கோஷம் விண்ணதிர்ந்தன
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுந்த ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதன்படி, 108 வைணவ திருதலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த 19-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 20ம் தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது. இதையடுத்து பகல் பத்து 10-ம் திருநாளான நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு இராப்பத்து முதல் திருநாளான இன்று(30.12.2025) காலை மூலஸ்தானத்தில் இருந்து தனுர் லக்னத்தில் 4:30 மணிக்கு நம்பெருமாள்,
ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயகஸ்தம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து விரஜா நதி மண்டபத்தில் எழுந்தருளிய நம் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார். பின்னர் அங்கிருந்த ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ, ரங்கா, ரங்கா, காவேரி ரங்கா கஸ்தூரி ரங்கா, கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்கள் விண்ணை பிளக்க 5:45 மணிக்கு பரமபத வாசலை கடந்தார்.
பின்னர் நம்பெருமாள் பக்தர்களுக்கு நேரடியாகச் சென்று காட்சி தரும் திருகொட்டகை பிரவேசம் கண்டருளினார். ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தடைந்து பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார்.
இன்று ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.
ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் நிகழ்வை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆனையர் ஸ்ரீதர், அமைச்சர் சேகர்பாபு, உயர் நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை இன்று இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்று அடைகிறார்.சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை நீண்டவரிசையில் நின்று பக்திபரவசத்துடன் சேவித்து வருகின்றனர்.வைகுண்ட ஏகாதசி விழாவில் திருச்சி மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர்..
பக்தர்கள் பாதுகாப்பிற்காக வெளியூர்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0