செல்லம்மாள் பள்ளி ஆண்டு விழா உற்சாகம்; மாணவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பர்வீன் சுல்தானா

Dec 17, 2025 - 19:46
Dec 17, 2025 - 20:00
 0  96
செல்லம்மாள் பள்ளி ஆண்டு விழா உற்சாகம்; மாணவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பர்வீன் சுல்தானா

செல்லம்மாள் பள்ளி ஆண்டு விழா உற்சாகம்; மாணவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பர்வீன் சுல்தானா

திருவெறும்பூர் அருகே வேங்கூரில் சௌடாம்பிகா கல்விக் குழும நிர்வாகத்திற்குட்பட்ட செல்லம்மாள் மெட்ரிக்குலேஷன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. இந்தப் பள்ளியின்  ஆண்டுவிழா ஆரா 2025 - ஆவி மற்றும் திறமையின் சிம்பொனி என்ற தலைப்பில் பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற்றது. 

 

இந்த நிகழ்ச்சிக்கு சௌடாம்பிகா கல்விக் குழுமச் சேர்மன் டாக்டர் ராமமூர்த்தி தலைமை வகித்துப் பேசினார். பள்ளி செயலாளர் செந்தூர்ச்செல்வன், பள்ளியின் முதன்மை முதல்வர் பகவதியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  விழாவில் கடந்த ஆண்டு செல்லம்மாள் பள்ளியில் 10 மற்றும் +2 படித்து முதன்மை இடம் பிடித்து தற்போது மெரீட்டில் பிரபல கல்லூரிகளில் மருத்துவம், இன்ஜினியரிங், சிஏ., படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை அடங்கிய காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கல்வித்துறை ஊக்கப் பேச்சாளரும், தன்னம்பிக்கை ஊட்டும் பிரபல பேச்சாளருமான டாக்டர் பர்வீன் சுல்தானா சிறப்புரை ஆற்றினார். 

 விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா  பேசியதாவது; இந்த பள்ளி நிகழ்வில் குறிப்பிட்ட ஏழு நபர்களுக்கு நிர்வாகம் சார்பில் நீங்கள் பரிசு கொடுத்தீர்கள் மகிழ்ச்சி தான், அவர்கள் ஜெயித்தவர்கள் தானே ஜெயித்ததுனால் அந்த பலனை அவர்கள் அடைந்து கொண்டிருக்கிறார்கள் தானே, இப்படி ஜெயித்ததினால் அவர்கள் பாராட்டப்படுவார்கள் என்பதை அடுத்தவர்களுக்கு காட்டத்தானே நீங்கள் அந்த ஏழு பேருக்கு பரிசு கொடுத்தீர்கள். நான் சொல்கிறேன் அடுத்த கல்வியாண்டில் இன்னும் ஏழு பரிசுகளை நீங்கள் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள், அந்த ஏழு பரிசுகளும் இது ஜெயிக்காது இது தேறாது பெயில் ஆயிடுவான் அப்படின்னு நினைக்கக்கூடிய யாராவது ஜெயிச்சுட்டான்னா அவர்களை அழைத்து பரிசு கொடுங்கள், இவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக கொஞ்சமாக மார்க் வாங்கிய அவர்கள் இவர்கள்தான் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சொல்லி அவர்களுக்கு பரிசு கொடுங்கள்.

 எப்பொழுதுமே ஃபர்ஸ்ட் மார்க் வாங்கும் நபர்களை மட்டுமே கொஞ்சும் பழக்கத்தை விட இரண்டாம் கட்டமாக மார்க் வாங்கக்கூடிய நபர்களை பார்த்து எப்பொழுதுதான் கொஞ்சுவது. நான் இங்கு மேடைப் பேச்சாளராக இருந்தாலும், எனது மதிப்பெண் பட்டியலில் நான் பத்தாம் இடம்.

அதே நேரம் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு நான் சொல்லக்கூடியது என்னவென்றால், இன்றிலிருந்து நீங்கள் கொடுக்கக்கூடிய ரிப்போர்ட் கார்ட எவ்வளவு லட்சம், எவ்வளவு ஆயிரம் நீங்கள் பிரிண்ட் செய்திருந்தாலும் ஆரம்பத்தில் நமது பள்ளி பருவத்தில் கொடுத்தது போல் ரிப்போர்ட் கார்டு, ரேங்க் கார்டு என வைக்காமல் பிராக்ரஸ் ரிப்போர்ட் என்ற சொல்லைப் பயன்படுத்தி மாற்றித் தர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க்கை என்றாலே பிராக்ரஸ் தாங்க, 28 மார்க் எடுத்தவன் 30 மார்க் எடுத்தால் அவன் ஜெயிக்கின்றான் என்று அர்த்தம், இந்த மார்க் எடுத்தவள் பெயில் தான் என நிர்வாகம் சொல்லும் போது கூட அவன், அவள் ஜெயிக்கின்றார்கள். 98 மதிப்பெண் எடுத்தவர்களை பார்த்து பயப்படாதீர்கள், வாழ்க்கையில் உங்கள் உயரம் எதுவோ அந்த மதிப்பெண்களை உங்கள் குழந்தை பெற்றுவிட்டால் அந்தக் குழந்தை 100 விழுக்காடு மதிப்பெண் பெறுவதற்கு சமம் என்கின்ற ஆதரவை அந்த பிள்ளைகளுக்கு நீங்கள் தர வேண்டும்.

 இதுதான் மிகப்பெரிய பதவி என்று ஒன்று கிடையாது. உதாரணத்துக்கு எடுத்துக்கோங்க, இந்த நிர்வாகத்தின் தாளாளர் விவசாயம் நடத்தியவர் ஹோட்டல் தொழில் நடத்தியவர் தான், ஆனா ரிட்டயர் ஆகுறதுக்கு 5 வருடத்திற்கு முன்பு ஒரு முடிவு எடுத்தார் பாருங்கள் ஒரு மிகப்பெரிய அசைவை ஏற்படுத்திட்டாரா இல்லையா, வயது அல்ல முன்னேறுவதற்கான காரணம், படிப்பு அல்ல முன்னேறுவதற்கான காரணம், உள் எழுச்சி தான் முன்னேறுவதற்கான காரணம். ஆகையால் தான் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார்.

 தன்னம்பிக்கையும் தன்னெழுச்சியும் தான் ஒரு மனிதன் முன்னேறுவதற்கான முழு காரணம். அந்த தன்னம்பிக்கையும் தன்னெழுச்சியையும் பெற்றோர்களாகிய நீங்கள் பிள்ளைகளிடம் கொண்டு சேருங்கள், பிள்ளைகள் வளரும்.

வாழ்க்கை வாய்ப்புகளால் நிறைந்திருக்கிறது. உதாரணமாக விலை உயர்ந்த மொபைல் ஒன்று என் கையில் இருக்கிறது அதை நான் பயன்படுத்துகின்றேன் அது என்னை பயன்படுத்த நான் அனுமதிப்பதில்லை.

விடாமுயற்சியுடன் செயல்பட்டு, உங்கள் இலக்குகளை அடையுங்கள். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள், தேவைப்பட்டால் உதவி கேளுங்கள், ஏனெனில் நீங்கள் நம்புவதை விட தைரியமானவர்கள் மற்றும் வலிமையானவர்கள்; வெற்றியின் பாதை கடினமானது, ஆனால் விடாமுயற்சியும் நம்பிக்கையும் இருந்தால், எதையும் சாதிக்கலாம் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் அகாடமி இயக்குனர் சரஸ்வதி, மேல்நிலை முதல்வர் ராஜா, உதவி முதல்வர் மருதாச்சலம், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் உஷா உட்பட பிரமுகர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக +2 மாணவி திவ்யநேத்ரா வரவேற்றார். மாணவர் அப்துல்லா நன்றி கூறினார்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0