நீதிமன்ற உத்தரவை உடனே அமல்படுத்து; பெல் தொழிற்சாலை முன்பு தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் வாயிற் கூட்டம்; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Dec 13, 2025 - 11:51
 0  46
நீதிமன்ற உத்தரவை உடனே அமல்படுத்து; பெல் தொழிற்சாலை முன்பு தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் வாயிற் கூட்டம்; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

நீதிமன்ற உத்தரவை உடனே அமல்படுத்து; பெல் தொழிற்சாலை முன்பு தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் வாயிற் கூட்டம்; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

 

திருவெறும்பூர் அருகே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த பெல் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரிய தொழிற்சங்கங்களின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் தொழிற்சங்கங்கள் வென்றது தொடர்பாக, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெல் பிரதான நுழைவு வாயில் முன்பு இன்று காலை தீர்ப்பு விளக்கம் மற்றும் தீர்ப்பினை உடனே அமல்படுத்தக்கோருவது தொடர்பான வாயிற்கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்த விபரம் வருமாறு;

   

திருச்சி பெல் நிறுவனத்தில் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான  தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக 1124 பேர் வேலை பார்த்து வந்தனர். இதில் பல தொழிலாளர்கள் ஓய்வு பெற்று விட்டனர், சில தொழிலாளர்கள் இறந்து விட்டனர். இந்நிலையில் தற்பொழுது சுமார் 500 தொழிலாளர்கள் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தொடர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளரும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவருமான மு.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு கடந்த டிச.5ம் தேதி நீதிபதி ஹேமந்த் சந்திரகௌடர் பிறப்பித்த உத்தரவில், தன்னிச்சையாகவும், விபரீதமாகவும் தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்வதாக உத்தரவிட்டதுடன், மனுதாரர் சங்கத்தின் உறுப்பினர்கள் பெல் நிறுவனத்தின் ஊழியர்களாகத்தான் கருதப்பட வேண்டும் எனவும், ஓராண்டில் 240 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைவரையும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளுடன் அவர்களின் பணியை வரன்முறைப்படுத்த வேண்டும் என்றும், இந்த பணிகளை 4 மாதங்களில் முடிக்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தார்.

 

மேலும், பெல் நிறுவனம் தனது செலவினங்களை குறைப்பதற்காகவே ஒரு சங்கத்தை உருவாக்கி, சொந்த ஊழியர்களையே அவுட்சோர்சிங் செய்தது என்பது தெளிவாகிறது. அத்தகைய நடைமுறை நியாயமானது அல்ல என்றும், சட்டப்பூர்வ கடமைகளை தவிர்ப்பதற்கான தந்திரம் என்றும், நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைக்கு சமமானது என்றும் நீதிபதி தனது உத்தரவில் அதிருப்தி தெரிவித்திருந்தார்.   

   சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்திரகௌடர் கடந்த 5-ம் தேதி பிறப்பித்த நீதிமன்ற ஆணையை உடனடியாக அமல்படுத்தக்கோரி பெல்மெயின் கேட் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் நடைபெற்ற வாயிற் கூட்டத்திற்கு பெல் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச்சேர்ந்த தீபன் தலைமை தாங்கினார். இந்த வாயிற் விளக்க கூட்டத்திற்கு பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்க பொதுச் செயலாளரும், திராவிடர் தொழிலாளர் கழக மாநில செயலாளருமான மு.சேகர் முன்னிலை வகித்தார். இந்த வாயிற் கூட்டத்திற்குப்பிறகு மு.சேகர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்;

  கடந்த 2012-ல் மதுரை நீதிமன்றத்தில் பெல் ஒப்பந்த தொழிலாளர்களாக பணி செய்யக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என எல்.சி.எஸ்.சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தோம். இந்த வழக்கில் மாண்புமிகு நீதியரசர் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையை பெல் நிர்வாகம் பரிசீலிக்கக்கோரியது. அந்த தீர்ப்பினை பெல் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியது. அதன் பின்னர் புதுச்சேரியில் தொழிலாளர் நலத்துறை சார்ந்த நீதிமன்றத்தில் கடந்த 2013-ல் வழக்கு தொடர்ந்தோம். அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் எங்களது கோரிக்கை தொடர்பானவற்றை தொழிலாளர் நலத்துறைக்கு ட்ரிபுனலுக்கு மாற்றினர். மத்திய அரசின் தொழிலாளர்நலத்துறை சார்ந்த ட்ரிபுனல்ல இருந்த அன்றைய நீதியரசர் பிரசன்னகுமார் விசாரணையின் இறுதியில் இவர்கள் பெல் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அதன்படி இவர்களையும் பெல் நிர்வாகத்தின் நிரந்தர தொழிலாளர்களாக கருத்தில் கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

   இந்த உத்தரவுகளையெல்லாம் கடந்து பெல் நிர்வாகம் உச்சநீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற பென்ட்ஸ், சென்னை உயர்நீதிமன்றம் என பல்வேறு கட்டங்களாக மேல் முறையீட்டு தாக்கல் செய்தனர். தொழிலாளர் நலத்துறை சார்ந்த நீதிமன்றத்திற்கும் சென்றனர். அதன்படி, மத்திய அரசு சார்ந்த தொழிலாளர் நலத்துறை நீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எதிரான தீர்ப்பினை வழங்கியது.

   இந்த தீர்ப்பினை எதிர்த்து நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கினை விசாரித்த நீதியரசர், ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமான கோரிக்கை. இவர்கள் நீண்ட காளமாக நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்த தொழிலாளர்களாகவே அவர்களை பெல் நிர்வாகம் கையாள்வது கண்டிக்கத்தக்கது.

   எனவே, ஒப்பந்த தொழிலாளர்கள் 1124 தொழிலாளர்களை பெல் நிறுவனத்தின் ஊழியர்களாகத்தான் கருதப்பட வேண்டும் எனவும், சொசைட்டி என்பது ஒரு முகமூடி அணிந்த திருட்டுத்தனமானது, ஓராண்டில் 240 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைவரையும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளுடன் அவர்களின் பணியை வரன்முறைப்படுத்த வேண்டும் என்றும், இந்த பணிகளை 4 மாதங்களில் முடிக்க வேண்டுமெனவும் நீதியரசர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

   இந்த தீர்ப்பு தொடர்பான ஆவணங்களை தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சி பெல் நிர்வாகத்திற்கும், மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை நிர்வாகத்திற்கும் கொண்டு சென்று சேர்த்துள்ளோம். இந்த தீர்ப்பின் ஆவணங்களின்படி பெல் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களை 4 மாதத்திற்குள் நிரந்தர தொழிலாளர்களாக பணியமர்த்த வேண்டும். தற்போது இந்த தீர்ப்புகளுக்கிடையே பெல் நிர்வாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றிய பலரும் பணி ஓய்வு பெற்று விட்டனர். சிலர் காலமாகி விட்டனர். சுமார் 476-க்கும் மேற்பட்டோர் இன்னும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய பெல் நிர்வாகம் முன் வரவேண்டும். நீதிமன்ற தீர்ப்பின்படி நாங்கள் 4 மாதம் பொறுமையாக காத்திருப்போம். சட்டப்போராட்டத்தில் நாங்கள் வென்றிருக்கின்றோம். இந்த தீர்ப்புக்கு மேல்முறையீடு ஏதும் பெல் நிர்வாகம் செல்லாமல் தற்போது பணியில் உள்ள தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமாய் இந்த வாயிற் கூட்டம் மூலம் பெல் நிர்வாகத்தை கேட்டுக்கொள்கின்றோம்.

   இந்த சட்டப்போராட்டத்திற்கு எங்களது தலைவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அய்யா முழுமையான ஒத்துழைப்போடு, பல்வேறு கட்டங்களிலும் ஆலோசனைகளை வழங்கி எங்களின் சோர்வை நீக்கி துணை நின்றார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நாங்கள் பெற்றதற்கு திராவிடர் கழகம் துணை நின்றது. இதன் மூலம் தலைவர் அய்யாவுக்கும் கழகத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த தீர்ப்பு என்பது நாடு முழுவதும் உள்ள ஒட்டு மொத்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு சாதகமான தீர்ப்பாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

   எனவே, பெல் நிர்வாகம், மத்திய தொழிலாளர் நலத்துறை, மத்திய அரசு எங்களின் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை, தீர்ப்பினை உடனே அமல்படுத்தி தொழிலாளர்களின் குடும்பத்தினை காக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத்தெரிவித்தார்.

   பெல் தொழிற்சாலையின் பிரதான வாயில் முன்பு இன்று அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சார்பில் தீர்ப்பு விளக்கம் மற்றும் அமல்படுத்தக்கோரும் வாயிற் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டதால் பெல் நிர்வாகம் மற்றும் தமிழக காவல்துறை சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

   இந்த வாயிற் கூட்டத்தில் தொமுச முத்துக்குமார், பாட்டாளி மக்கள்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த செல்வராஜ், புரட்சி ஜனநாயகம்தொமு உத்திராபதி, அம்பேத்கர் சங்கத்தை சேர்ந்த கணபதி, டிடிஎஸ் லோகநாதன், எல்எஒல்எப் இராமர், சிஐடியு பரமசிவன், பிஎம்எஸ் ஜெயராமன், ஐஎன்டியுசிஅலெக்ஸ், ஏடிபி வில்லியம் பீட்டர் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்க கூட்டு குழு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

 க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0