மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம்: காற்று, மழையை கடந்து மூன்று நாட்கள் பிரகாசிக்கும்

Dec 3, 2025 - 19:31
 0  53
மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம்: காற்று, மழையை கடந்து மூன்று நாட்கள் பிரகாசிக்கும்

மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம்: காற்று, மழையை கடந்து மூன்று நாட்கள் பிரகாசிக்கும் 

 கார்த்திகை தீபத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபத்தையும், சாமியையும் தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீபத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப கொப்பரையில் வைக்கப்பட்டிருந்த மெகா திரியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 3-ஆம் தேதி இன்று (புதன்க்கிழமை) மாலை 6.00 மணி அளவில் மலை உச்சியில் உள்ள கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பூர்வாங்க பூஜை செய்து, தீபம் ஏற்றுவதற்கான மெகா திரியை தயார் செய்து கொப்பரையில் வைத்து எண்ணெய் ஊற்றும் பணி நடைபெற்றது. இதற்காக 300 மீட்டர் நீளமுள்ள பருத்தித் துணியால் பிரம்மாண்ட திரி தயாரிக்கப்பட்டது.

பின்னர் மேலே தூக்கி சென்று கயிறு கட்டி மலை உச்சியில் 40 அடி உயரமுள்ள இரும்பு கோபுரத்தின் மேலே 5 அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில் திரி ஏற்றி வைக்கப்பட்டது.

இந்த பிரம்மாண்ட திரி வைக்கப்பட்ட கொப்பரையில் 700 லிட்டர் அளவுள்ள நல்லெண்ணெய், இலுப்பை எண்ணை, நெய் ஆகியவை ஊற்றி தீபம் ஏற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதில் கார்த்திகை தீபதிருநாளான நேற்று இந்த மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக இன்று மாலை 5.00 மணிக்கு மேல், தாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மையுடன் சிறப்பு அலங்காரத்தில், செவ்வந்தி விநாயகர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு செய்யப்பட்டு மலை உச்சியில் உள்ள அரச மரத்தடிக்கு தூக்கி வரப்பட்டனர். பின்னர் அங்கு நின்றவாறு மலை உச்சியில் தரையில் இருந்து 278 அடி உயரத்தில் உள்ள கோபுரத்தின் உச்சியை பார்த்தபடி நின்றார்கள்.

அதை தொடர்ந்து தீபாராதனை செய்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து நேற்று முன்தினம் ஏற்றப்பட்ட பரணி தீபத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட தீபத்தை கார்த்திகை தீப கோபுரத்தில் உள்ள திரியில் வைத்து மாலை சரியாக 6.00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

 

முன்னதாக, நேற்று முன்தினம் மாலை தாயுமான சுவாமி சன்னதியில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம், தீபாராதனை செய்து பரணி தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றப்பட்ட பின் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் மலைக்கோட்டை சுற்றி உள் மற்றும் வெளி வீதிகளில் வலம் வந்தனர்.

மேலும் நேற்று ஏற்றப்பட்ட இந்த கார்த்திகை தீபமானது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அணையாமல் எரியும். இந்த தீபத்தை மலைக்கோட்டை சுற்றியுள்ள சுமார் 3 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள மக்கள் பார்க்க முடியும். மேலும் தீபம் ஏற்றப்பட்ட பின்னர் மலைக்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு கோயில்களில் (கூம்பு) சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம், கோவில் உதவி ஆணையர் அருட்செல்வன், அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள், பேஸ்கார், கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0