ஹாக்கி உலகக்கோப்பை அறிமுக விழா; அமைச்சர் கே.என்.நேரு உற்சாகம்

Nov 19, 2025 - 14:37
 0  2
ஹாக்கி உலகக்கோப்பை அறிமுக விழா; அமைச்சர் கே.என்.நேரு உற்சாகம்

ஹாக்கி உலகக்கோப்பை அறிமுக விழா; அமைச்சர் கே.என்.நேரு உற்சாகம்


   

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டி சென்னை மற்றும் மதுரை மாவட்டத்தில் நடைபெறுவதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. 
   அந்தவகையில், திருச்சி அண்ணா விளையாட்டரங்கிற்கு வந்தடைந்த வெற்றிக் கோப்பையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் முன்னிலையில் நடைபெற்ற விழா நிகழ்வில் அறிமுகப்படுத்தினார். 
   தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் தனிநபர்களுக்கு விளையாட்டுகளை முழு திறனுடன் அணுகவும், விளையாட்டு வீரர்கள் உயர்மட்ட போட்டிகளில் பங்குபெற்று சிறப்படையும் வாய்ப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வழங்குகிறது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 
   தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய வளைகோல் பந்து சங்கத்துடன் இணைந்து நடத்தும் ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை எதிர் வரும் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சென்னை மற்றும் மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
   ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை சுற்றுப்பயணத்தை (Trophy Tour) கடந்த 10.11.2025 அன்று சென்னையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த சுற்றுப்பயணம் சென்னை முதல் கன்னியாகுமாரி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் உலகக்கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
   அந்தவகையில் திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் உலகக்கோப்பை காட்சிப்படுத்தும் நிகழ்வு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. 


விளையாட்டுத்துறையில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குகொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்குஉயரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
   இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்தில் மேம்படுத்தி செஸ் ஒலிம்பியாட், ஸ்குவாஷ் உலககோப்பை போட்டிகள், ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டிகள், சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் என பல்வேறு போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளது. 
   அந்தவகையில் தற்பொழுது, ஆண்களுக்கான ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டி தமிழ்நாட்டில் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டரங்கம் ஆகிய இரு இடங்களிலும் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சிறப்பாக நடைபெறஉள்ளது. இப்போட்டியில் 24 நாடுகளை சேர்ந்த ஹாக்கி அணிகள் பங்கேற்க உள்ளன. 
தமிழ்நாட்டில் இப்போட்டிகள் நடத்தப்படுவதால் நம் இளைஞர்களிடையே ஹாக்கி விளையாட்டின் மீதான ஆர்வத்தை பலமடங்கு அதிகரித்திட வாய்ப்பாக அமையும். மேலும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஹாக்கிஅணிகள் மற்றும் பார்வையாளர்கள் தமிழ்நாட்டின் குறிப்பாக போட்டிகள் நடைபெறும் சென்னை மற்றும் மதுரை நகரங்களின் கலாச்சார செழுமை, விருந்தோம்பல் மற்றும் விளையாட்டின் மீதான நமது ஈடுபாட்டை நேரடியாக அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.  
   இப்போட்டிகளின் வாயிலாக தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்தும் நமது திறனையும் உலகிற்கு வெளிப்படுத்த வாய்ப்பாக அமைகிறது என அமைச்சர் தெரிவித்தார். 
   இந்த நிகழ்வில் மாநராட்சிமேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞான சுகந்தி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், அரசு அலுவலர்கள், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0