தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

Nov 3, 2025 - 09:17
 0  11
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியில் 58 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் இந்தியாவின் தீப்தி சர்மா.

நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 299 ரன்கள் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க அணி விரட்டியது. அந்த அணிக்காக கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

23 ரன்களில் ரன் அவுட் ஆனார் பிரிட்ஸ். பீல்டிங்கில் அமன்ஜோத் அபாரமாக செயல்பட்டு ஸ்டம்புகளை தகர்த்தார். அன்னேக்கே போஷ் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்ரீ ஷரணி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் சுனே லுஸ் உடன் இணைந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் லாரா. அந்த கூட்டணியை ஷபாலி பிரித்தார். தொடர்ந்து வந்த மரிசான் காப் விக்கெட்டையும் ஷபாலி கைப்பற்றினார்.

அன்னேரி டெர்க்சன் மற்றும் லாரா இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர். ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் அந்த கூட்டணியை பிரித்தார் தீப்தி. அன்னேரி டெர்க்சனை அவர் போல்ட் செய்தார். சதம் கடந்து இந்தியாவின் வெற்றிக்கு தடையாக நின்ற லாரா வோல்வார்ட் விக்கெட்டை அதற்கடுத்து வீசிய ஓவரில் தீப்தி வீழ்த்தினார். அவர் 98 பந்துகளில் 101 ரன்கள் எடுத்திருந்தார். பெரிய ஷாட் ஆட முயன்றார் லாரா. ஆனால், பந்து அமன்ஜோத் வசம் தஞ்சமானது. பந்தை தட்டி தட்டி பிடித்திருந்தார் அமன்ஜோத். அதே ஓவரில் குளோ டிரையானை எல்பிடபிள்யூ முறையில் தீப்தி வெளியேற்றினார். அயபோங்கா காக்கா 1 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நடின் டி கிளர்க் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 9.3 ஓவர்கள் வீசி, 39 ரன்கள் கொடுத்து, 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் தீப்தி. ஷபாலி 2, ஸ்ரீ ஷரணி 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 52 ரன்களில் வெற்றி பெற்று உலக கோப்பையை முதல் முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0