கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா; பிரம்மாண்ட கூட்டத்தை கூட்ட முடிவு; அமைச்சர் கே என் நேரு நேரில் ஆய்வு

Sep 16, 2025 - 20:05
Sep 16, 2025 - 21:02
 0  5
கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா; பிரம்மாண்ட கூட்டத்தை கூட்ட முடிவு; அமைச்சர் கே என் நேரு நேரில் ஆய்வு

கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா; பிரம்மாண்ட கூட்டத்தை கூட்ட முடிவு; அமைச்சர் கே என் நேரு நேரில் ஆய்வு

 கரூரில் நாளை திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவை பிரம்மாண்டமாக நடத்திக் காட்ட திமுக தலைமை முடிவெடுத்துள்ளது. திருச்சி கரூர் பைபாஸ் சாலை கோடாங்கிப்பட்டி அருகே திமுக முப்பெரும் விழா நாளை நடைபெற இருக்கின்றது. இந்த விழாவில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் திரளாக பங்கேற்கின்றனர். எதிர்வரும்

 சட்டமன்றத் தேர்தலுக்கான வெள்ளோட்டமாகப் பார்க்கப்படும் இந்த முப்பெரும் விழாவை பிரமாண்டமாக நடத்திக் காட்டவேண்டிய கட்டாயத்தில் கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான செந்தில் பாலாஜி இருக்கிறார். இந்த விழாவுக்காக கோடங்கிபட்டி அருகில் 50 ஏக்கர் நிலத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன. அதோடு, 200 அடி அகலம் 60 அடி நீளத்தில் மிக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தினம் ஒரு அமைச்சர் என கரூர் கோடங்கிப்பட்டியில் விழா நடைபெறும் இடத்தைப் பார்வையிட வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மதிவாணன் ஆகியோர் ஒவ்வொரு நாளாக வந்து பார்வையிட்டு விழா ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியோடு கலந்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று காலை இரண்டாவது முறையாக திருச்சியிலிருந்து விழா நடைபெறும் கரூர் திருச்சி பைபாஸ் சாலை கோடங்கிப்பட்டிக்கு கே.என் நேரு வருகை தந்தார். விழா மேடை வடிவமைப்பு மற்றும் தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் அமரக்கூடிய இருக்கை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார். பின்னர் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதேபோல், இந்த முப்பெரும் விழாவில், தி.மு.க சார்பில் தந்தை பெரியார் விருது திமுக எம்.பி கனிமொழிக்கும், அறிஞர் அண்ணா விருது சுப.சீதாராமன், கலைஞர் விருது சோ.மா.ராமச்சந்திரன், பேராசிரியர் விருது ராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருது பொங்கலூர் நா.பழனிச்சாமி மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் விருது சமீபத்தில் மறைந்த அமரர்.குளித்தலை சிவராமன் அவர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இந்த முப்பரும் விழா மதுரை பைபாஸில் இருந்து திருச்சி பைபாஸில் உள்ள கோடங்கிப்பட்டில் நடைபெற இருப்பதால், நாளை 17-ம் தேதி மட்டும் சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என அனைத்தும் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் வருகையை ஒட்டி கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சர் செப்டம்பர் 17-ம் தேதி திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10:30 மணிக்கு வருகிறார். பின்னர், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை, திருச்சியில் நடைபெறும் ஆய்வுக் கூட்டம், உறுதிமொழி ஏற்பு நிகழ்வு ஆகியவற்றில் கலந்துகொள்கிறார். பின்பு, அங்கிருந்து கார் மூலம் கரூர் தான்தோன்றிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்து, சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர், மாலை 4 மணியளவில் புறப்பட்டு முப்பெரும் விழா நடைபெறும் மேடைக்கு வருகை தர உள்ளார். தமிழக முதலமைச்சர் நேரடியாக விழா மேடைக்கு வருகை தருவதற்காக கோடங்கிப்பட்டியில் இருந்து விழா மேடை வரை தனி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்து நடைபெற உள்ள சட்டப் பேரவை பொதுத்தேர்தலை எதிர் கொள்ள பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில், கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுக தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முப்பெரும் விழாவில் தொண்டர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக 1 லட்சம் சேர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முப்பெரும் விழாவை பிரசார மேடையாகவே முதல்வர் மாற்ற நினைக்கிறார் இன விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் திருச்சிக்கு தவெக தலைவர் விஜய் வந்தபோது பிரம்மாண்ட கூட்டம் திருச்சியை திணறடித்தது. இது தமிழகம் எங்கும் பேசும் பொருளானது. இதனால் நாளை நடைபெறும் கரூர் முப்பெரும் விழாவை திமுகவின் முதல் பிரச்சார மேடையாக மாற்ற திமுக தலைவர் நினைத்திருப்பதாகவும் அதற்கு ஏற்றார் போல் மாவட்டம் தோறும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை கூட்டி வர பொறுப்பு அமைச்சர்கள் நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் நாளை கரூர் மாநகரம் குலுங்கும் என திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். முன்னதாக, முதல்வர் 'கொள்கையுள்ள கூட்டம் கரூர் முப்பெரும் விழாவில் கூடும்' என்று டச் செய்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். அதனால், இந்த விழாவில் பிரமாண்ட கூட்டத்தை கூட்டிக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க தலைமை இருக்கிறது என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள். க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0