திருச்சியில் முதல்வர் வருகையின்போது சாலை மறியல்; காவல்துறையினர் சமரசம் : மீண்டும் மறியலால் பரபரப்பு
திருச்சியில் முதல்வர் வருகையின்போது சாலை மறியல்; காவல்துறையினர் சமரசம் : மீண்டும் மறியலால் பரபரப்பு
புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் விஜய் இன்று காலை திருச்சி வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை சென்றார். அப்போது ஏர்போர்ட் செம்பட்டு பகுதியில் 3 தலைமுறைகளாக வசிப்பவர்களை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதை கண்டித்து, முதல்வர் விஜய் வாகனத்தை குடியிருப்பு வாசிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு ;
திருச்சி கிழக்கு தொகுதி செம்பட்டு என்எம்டி காலனி பகுதியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் இயங்கி வந்த என்எம்டி தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களின் குடியிருப்புத் தேவைகளுக்காக, அந்தத் தொழிற்சாலைக்கு எதிரே இவ்விடம் ஒதுக்கப்பட்டது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினரும் 'தொழிலாளர்கள்' என்ற அடிப்படையில், மூன்று தலைமுறைகளைக் கடந்து எவ்வித பாகுபாடுமின்றி, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தாங்கள் குடியிருந்து வரும் இந்த முழு இடத்தையும் சிலர் விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறி, அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 10 நாட்களுக்குள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் எனவும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையடுத்து, தங்களின் வாழ்விடத்தைக் காப்பாற்றக் கோரி, திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக முதல்வர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்களை, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தங்களின் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டுகளை கைகளில் ஏந்தியும், தங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்டும் முழக்கங்களை எழுப்பினர்.
பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவை முதல்வர் விஜய் பெற்றுக்கொண்டார். முதல்வரின் வாகனம் முற்றுகையிடப்பட்டதை அடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் உடனடியாக விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சாலையின் ஓரமாக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
முன்னதாக, புதுக்கோட்டையிலிருந்து தமிழக முதல்வர் திரும்பி வரும்போது, மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவார்" எனத் தங்களுக்குக் காவல்துறையினர் பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவிட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியவர்கள், புதுக்கோட்டையில் இருந்து முதல்வர் திரும்பும் போது இவர்களை கண்டு கொள்ளாத அதிர்ச்சியில் மீண்டும் சாலை மறியலில் குதித்தனர். முதல்வர் வாகனம் கடந்து சென்ற பிறகு அப்பகுதி பொதுமக்கள் நடத்திய சாலை மறியலால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதல்வர் வாகனத்திற்கு பின்னால் வந்த அரசு அதிகாரிகளின் வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0