ரூ.50 கோடி கோயில் நிலம் ஆக்கிரமிப்பு; ஸ்ரீரங்கம் திமுக நிர்வாகி கைது
ரூ.50 கோடி கோயில் நிலம் ஆக்கிரமிப்பு; ஸ்ரீரங்கம் திமுக நிர்வாகி கைது
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்து ஆக்கிரமித்த வழக்கில், திருச்சி ஸ்ரீரங்கம் திமுக பகுதிச் செயலாளர் எம்.ராம்குமார் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகரை சேர்ந்தவர் ராம்குமார். திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளராக உள்ளார். இவர், ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் உள்ள ரூ.50 கோடி மதிப்புடைய ரங்கநாதர் கோயில் சொத்தை அபகரித்தாக கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் திருச்சி மாநகர குற்றப் பிரிவில் புகார் கொடுத்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகே சுமார் 7,515 சதுர அடி இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அந்த 2022 ஆம் ஆண்டு அபகரித்ததாக ராம்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வழிகாட்டுதலின்படி இந்த புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக பிரமுகர் ராம்குமார் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு ராம்குமார் காரில் சென்று கொண்டிருக்கும்போது நடுவழியில் அவரை மடக்கி பிடித்த மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கிற்கு முன்ஜாமின் கேட்டு ராம்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இந்த கைதுக்கு பிறகு ரூ.50 கோடி நிலம் போலி பத்திர பதிவு வழக்கில் தொடர்புடைய பத்திரப்பதிவாளர் மற்றும் உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மீது வழக்கின் தன்மை நீளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0