தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ; மதுரையில் துவக்கி வைத்த முதல்வர் ; மும்மதத்தினரை மேடையில் அமர வைத்தது கவனம் ஈர்ப்பு 

Sep 28, 2026 - 13:16
Sep 28, 2026 - 14:04
 0  32
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ; மதுரையில் துவக்கி வைத்த முதல்வர் ; மும்மதத்தினரை மேடையில் அமர வைத்தது கவனம் ஈர்ப்பு 

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ; மதுரையில் துவக்கி வைத்த முதல்வர் ; மும்மதத்தினரை மேடையில் அமர வைத்தது கவனம் ஈர்ப்பு 

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இந்த திட்டம் இன்று நடைமுறைக்கு வந்தது. மதுரையில் முதல்வரும் பிற மாவட்டங்களில் அப்பகுதியில் உள்ள அமைச்சர்கள் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்ட தொடக்க விழாவில், 3 மதங்களைச் சேர்ந்த தாய்மார்கள் தங்களது குழந்தைகளுடன் மேடையில் அமர வைக்கப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது.

இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தலா ஒரு தாயார் தங்களது குழந்தையுடன் மேடையில் அமரவைக்கப்பட்டு இருந்தனர். முதல்வர் விஜய் முதலில் அந்த 3 குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தார்.

தொடர்ந்து மேடைக்கு கீழே அமர்ந்திருந்த தாய்மார்கள் கையில் மோதிரத்தை வழங்கினார். அப்போது சில பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கும் மோதிரத்தை முதல்வரே கையில் மாட்டிவிடும்படி கேட்டுக் கொண்டனர். அவர்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில் அக்குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் கைகளிலேயே மோதிரத்தை மாட்டிவிட்டார்.

சில பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்படி அன்போடு கேட்டனர். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர்கள் குழந்தைகளை கையில் தூக்கி வைத்து கொஞ்சியதோடு பெயர் சூட்டினார். அப்போது ஒரு பெண், உணர்ச்சி பெருக்கத்தில் தனது குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வரைப் பார்த்து அழுதார். அந்தப் பெண்ணை முதல்வர் விஜய் கட்டிப்பிடித்து ஆறுதல்படுத்தினார். 

கடைசியாக முதல்வர் விஜய், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் பயனடைந்த தாய்மார்கள், அவர்கள் குழந்தைகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதல்வர் கையில் வழங்கி மகிழ்ச்சியடைந்தனர். புகைப்படம் எடுத்து முடித்தும், அனைத்து தாய்மார்களுடன் முதல்வர் விஜய் ‘செல்ஃபி’ புகைப்படமும் எடுத்துக் கொண்டார். 

இதனைத் தொடர்ந்து, ராஜாஜி அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்குச் சென்ற முதல்வர் விஜய், அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 10 குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தார். 

மத வேறுபாடின்றி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த குழந்தைகளும் திட்டத்தின் கீழ் ஒரே நிகழ்ச்சியில் தங்க மோதிரம் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது கவனம் பெற்றது.

மதுரை சென்ற முதல்வருக்கு விமான நிலையம் முதல் அவர் பயணிக்கும் சாலைகள் அனைத்திலும் திரளான தொண்டர்கள் மலர்கள் தூவி வரவேற்பு கொடுத்தனர். மீனாட்சி வேடமிட்ட ஒரு குழந்தை முதல்வரை வரவேற்க அதை கையில் தூக்கி தோளில் சுமந்து கொஞ்சி மகிழ்தார் தமிழக முதல்வர் விஜய்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0