வரும் 2 ஆண்டுகளில் 9 ஆயிரம் காலி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் விஸ்வநாதன்
வரும் 2 ஆண்டுகளில் 9 ஆயிரம் காலி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் விஸ்வநாதன்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வின்போது வரும் 2 ஆண்டுகளில் 9 ஆயிரம் காலி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பெயரில் தமிழக அரசு 5 ஆண்டுகளுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தொகை கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள் மற்றும் ஆய்வகங்கள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடியும், பிற பல்கலைக்கழகங்களுக்கு ரூ.60, ரூ.80 மற்றும் ரூ.90 கோடிகளும் மாநில அரசு கிராண்டாக வழங்கப்படுகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு (2026-27 ஆம் ஆண்டு) தேவையான நிதி குறித்து உயர்கல்வி மற்றும் நிதித்துறையுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் மத்தியிலுள்ள மையப் பல்கலைக்கழகமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் கல்வித் தரத்தை நமது மாநிலத்திலேயே வழங்கும் நோக்கில் கிரீன் ஃபீல்டு பல்கலைக்கழகத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முந்தைய காலத்து நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு, 100 ஏக்கர் நிலம் என்பது 25 ஏக்கராகவும், ரூ.50 கோடி காஷன் டெபாசிட் என்பது ரூ.25 கோடியாகவும் குறைக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஊழலற்ற, மாணவர்களின் நலன்சார்ந்த திட்டமாகும்.
பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களை நியமிப்பதற்காகவும், நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் சிண்டிகேட் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர், பல்கலைக்கழகங்களில் உள்ள மிக மூத்த பேராசிரியர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களைப் பல்கலைக்கழகங்களின் இடைக்கால துணைவேந்தர்களாக நியமிக்க முடிவு செய்வார்கள்.
ஏற்கனவே இந்த சிண்டிகேட் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மூத்த பேராசிரியர்கள் இடைக்கால துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே நடைமுறை தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களிலும் விரைவில் பின்பற்றப்படும்.
எனினும், இது தொடர்பான நீதிமன்றத்தின் ஆணைக்காகத் தற்போது அரசு காத்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போது மொத்தம் 9 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதற்கட்டமாக, 2 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட டி.ஆர்.பி தேர்வில் 27,000 பேர் தேர்ந்துள்ளனர்.
வரும் இரண்டு ஆண்டுகளில் இந்த 9 ஆயிரம் பேராசிரியர் காலிப் பணியிடங்களும் தகுதியான நபர்களைக் கொண்டு முழுமையாக நிரப்பப்படும். இந்த நியமனங்கள் அனைத்தும் எவ்வித விதிமீறல்களும் இன்றி, பல்கலைக்கழக நிதியுதவிக் குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றியே மிக வெளிப்படையான முறையில் நடைபெறும்.
இந்த நிகழ்வில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேஷ்கண்ணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0