மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர் எம்பிக்கள் விஐபி தரிசனம் ஏன்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்

Sep 22, 2026 - 14:02
 0  42
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர் எம்பிக்கள் விஐபி தரிசனம் ஏன்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அமைச்சர் எம்பிக்கள் விஐபி தரிசனம் ஏன்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து, கல்வியில் முழுமையான கவனம் செலுத்தும் வகையிலும் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் விரிவுபடுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் இன்று இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. சென்னை திருவொற்றியூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொண்டு, காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளிலும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

அதன்படி, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி, திருச்செந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு, காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவியர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரமேஷ் தெரிவித்ததாவது:

திருச்சி மாவட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் 415 பள்ளிகளில் சுமார் 36,800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சிப் பகுதிகளில் 33 பள்ளிகளில் 5,845 மாணவர்களும், நகராட்சிப் பகுதிகளில் 27 பள்ளிகளில் 5,567 மாணவர்களும் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள 115 பள்ளிகளில் 14,941 மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக திருச்சி மாவட்டத்தில் 590 பள்ளிகளில் 63,157 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கும், கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், உலக அளவில் தமிழக மாணவர்கள் பெயர் பெறுவதற்கும் தேவையான கல்வித் தரத்தை உயர்த்துவதுடன், மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்ரீரங்கம் கோவில் நில விவகாரத்தில் திமுக பகுதி செயலாளர் முன்ஜாமீன் கோரி இருப்பது குறித்த கேள்விக்கு:- இது பொய்யான புகார் என்றால் அவர் ஏன் முன்ஜாமீன் கோர வேண்டும்? ஏற்கனவே வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வழக்கிலும் சம்பந்தப்பட்ட நிலம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவசரமாக முன்ஜாமீன் கோர வேண்டிய சூழ்நிலை ஏன் ஏற்பட்டது என்பது கேள்வியாக உள்ளது என்றார்.

மேலும், ஸ்ரீரங்கம் நில விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் வேறு எந்தெந்த இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். 

இந்த விவகாரத்தில் நிலத்தை வைத்திருந்தவர்கள், வாங்கியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அனைவரும் விசாரிக்கப்படுவார்கள், பொதுமக்கள் இது தொடர்பாக எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

நான் திருவண்ணாமலையில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பொது தரிசன வழியில் சென்றது குறித்து பேசியதையும், மதுரையில் பேசியது குறித்தும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார். ஆப்பிளையும் ஆப்பிளையும் ஒப்பிடலாம்; ஆப்பிளையும் ஆரஞ்சையும் எப்படி ஒப்பிட முடியும். இவர்களுக்கு அடிப்படை அறிவே கிடையாது.

மதுரை கும்பாபிஷேகத்தில் பல வேலைகள் இருந்ததால் ஏற்பாடுகளை கவனிக்க நாங்கள் விஐபி தரிசன வழியில் சென்றோம். சாதாரண நாட்களில் விஐபி தரிசன வழியில் செல்வது குறித்து பேசினால் அவர் கும்பாபிஷேக நாளில் விஐபி தரிசனம் வழியில் செல்வது குறித்து பேசுகிறார்.

கும்பாபிஷேக விழாவில் சிலரை எம்எல்ஏ ஒருவர் அழைத்துச் சென்றது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கும்பாபிஷேக விழாவில் எத்தனை பேர் பங்கேற்க முடியுமோ அதற்கேற்ப அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும்.

ஸ்ரீரங்கம் பகுதியில் வரி உயர்வு தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. உண்மையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பிரச்சினை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் எதுவும் செய்யவில்லை என்ற காரணத்தினால்தான் மக்கள் திமுக தலைவரை தோற்கடித்துள்ளனர்.

மேலும், சட்டப்பேரவையில் தாங்கள் பாடிய பாடல்களை தற்போது உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் பேசி வருகிறார். 

ஒரு மாத காலமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு துறையின் சார்பிலும் அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர். சட்டப்பேரவை நிகழ்வுகளை முறையாக கவனித்திருந்தால் எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பது தெரிந்திருக்கும் உதயநிதிக்கு தெரிந்திருக்கும்.

மின்வெட்டு பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக அந்தந்த துறை அமைச்சர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி தபோவனம் மடம் நிலம் தொடர்பாக ஏற்கனவே விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அது தொடர்பான தகவல்கள் வெளிக்கொண்டு வரப்படும். விசாரணை முடிவுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

 முன்னதாக அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடுவே அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மின் தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சரிடம் முறையிட வந்தார். ஒரு நாளைக்கு பல மணி நேரம் மின் வெட்டு இருக்கின்றது நாங்கள் வாழ்வதா சாவதா என்று பேசினார். உடனே காவல்துறையினரும் அங்குள்ள முக்கிய பிரமுகர்களும் அவரை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0