வேளாண்மை பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது; கடன் தள்ளுபடி தான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு - பி.ஆர்.பாண்டியன்

Aug 7, 2026 - 01:22
 0  13
வேளாண்மை பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது; கடன் தள்ளுபடி தான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு - பி.ஆர்.பாண்டியன்

வேளாண்மை பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது; கடன் தள்ளுபடி தான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு - பி.ஆர்.பாண்டியன் 

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில், தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென் மண்டலத் தலைவர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். இதில் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் மாநிலக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; தமிழக அரசின் பொது பட்ஜெட்டில் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.9,624 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நீண்ட காலத்திற்குப் பிறகு நீராதாரத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். இருப்பினும் வேளாண் பட்ஜெட்டில் பல நல்ல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தாலும், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. விவசாயிகள் எதிர்பார்த்த பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தேர்தல் வாக்குறுதியின்படி சிறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், பெரிய விவசாயிகளுக்கு பகுதியளவிலும் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்தோம். மாநிலத்தின் நிதி நெருக்கடி காரணமாக அறிவிப்பு தாமதமாகியிருக்கலாம். இருப்பினும் முதலமைச்சர் விரைவில் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து நல்ல முடிவை அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம்.

உச்சநீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும். கும்பகோணத்தில் நம்மாழ்வார் பெயரில் பாரம்பரிய வேளாண்மை பட்டயப் படிப்புக்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். காய்கறி, பழங்கள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய, கேரளா மாநிலத்தைப் போல மாவட்ட ஆட்சியர் தலைமையில் விளைபொருள் கொள்முதல் மற்றும் விலை கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும். இந்த கோரிக்கை வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அணையை பலப்படுத்தி, 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். புதிய அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக, உச்சநீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

அதேபோல், காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற தேவையான முழு நிதியையும் ஒதுக்க வேண்டும். கருவேல மரங்களை அகற்ற ரூ.9 கோடி மட்டும் ஒதுக்கியிருப்பது போதுமானதல்ல. கூடுதல் நிதி ஒதுக்கி, தரிசு நிலங்களை மேம்படுத்தி தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திமுக ஆட்சியில் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நீர்ப்பாசனத் துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் நீர் மேலாண்மை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக கிடைக்கவில்லை, பல்வேறு விதிமுறைகள் காரணமாக ஏராளமான விவசாயிகள் பயனடைய முடியவில்லை. சாகுபடி பரப்பளவின் அடிப்படையில் விவசாயிகளுக்கு போதுமான அளவு கடன் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திகிறேன். பெண்களின் பொருளாதார முன்னேற்றம், கால்நடை வளர்ப்பு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும். அரசு நிதிச் சுமையை காரணம் காட்டி வேளாண் உற்பத்தியை பாதிக்காமல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மதுரை மண்டல தலைவர் பரமக்குடி மதுரை வீரன், செயலாளர் விருதுநகர் உறங்காபுலி, கவுரவ தலைவர் எல்.ஆதிமூலம், மாநில இளைஞரணி தலைவர் மேலூர் அருண், மதுரை மாவட்ட தலைவர் உசிலம்பப்பட்டி மணிகண்டன், சிவகங்கை மாவட்ட தலைவர் இராமலிங்கம், கவிருதுநகர் மாவட்ட செயலாளர் ராஜாங்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். வரும் செப்டம்பர் 5ல் மதுரையில் வறட்சி மாநாடு நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0