களைகட்டிய ஜனநாயகன் கொண்டாட்டம்: கேக் வெட்டி கொண்டாடிய எம். எல்.ஏ., தியேட்டரில் குவிந்த அமைச்சர்கள்

Jul 23, 2026 - 11:54
Jul 23, 2026 - 12:00
 0  59
களைகட்டிய ஜனநாயகன் கொண்டாட்டம்: கேக் வெட்டி கொண்டாடிய எம். எல்.ஏ., தியேட்டரில் குவிந்த அமைச்சர்கள்

களைகட்டிய ஜனநாயகன் கொண்டாட்டம்: கேக் வெட்டி கொண்டாடிய எம். எல்.ஏ., தியேட்டரில் குவிந்த அமைச்சர்கள்

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் வெளியானது முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம். பல்வேறு தடைகளைக் கடந்து இன்று ஜனநாயகன் வெளியானதை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் மேளதாளம் முழங்க, பால் ஊற்றியும், கேக் வெட்டியும், ரத்தத்தால் அபிஷேகம் செய்தும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த விபரம் வருமாறு ;

கே.பி.நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகரும், தமிழக முதல்வருமான விஜய் நடித்த கடைசித் திரைப்படம் ஜனநாயகன்.

இத்திரைப்படம் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே வெளிவந்து அரசியல் பேச வேண்டும் என்பதற்காக விஜய் தரப்பினர் வேகமாக படத்தை இயக்கி அதற்காக பரபரப்பான விளம்பரங்களையும் மேற்கொண்டனர்.

திரைப்படம் ஜனவரி 1ஆம் தேதி அதாவது பொங்கலுக்கு முன்னதாக வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், தணிக்கை குழுவினரால் ஏற்பட்ட சிக்கலில் படத்திற்கு சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் சென்று படத்தை வெளியிடுவதற்காக போராடி வந்தது.

இதனிடையே இத்திரைப்படத்தை சமூக விரோதிகள் டெலிகிராம் செயலியில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டு இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இத்திரைப்படம் வெளியானது திமுகவினர் தான் காரணம் என திமுகவினர் மீதும் பழியை சுமத்தி வந்தனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வராகப் நடிகர் விஜய் பதவியேற்ற 80 நாட்களுக்குப் பிறகு, இப்படம் இந்தியா முழுக்க சுமார் 3,000 திரைகளிலும், உலகம் முழுவதும் இன்று வெளியானது. தமிழகத்தில்

சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியில்லாத நிலையில் இன்று காலை படம் 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள் வெளியாகி விட்டன. 

தேர்தலில் நடிகர் விஜய் வெற்றி பெற்ற பின்னர் முதலமைச்சராக பதவி ஏற்ற நிலையில் இன்று வெளியான ஜனநாயகன் படத்தின் டைட்டில் கார்டில் 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி.ஜோசப் விஜய் நடிக்கும் என பெயர் வருகிறது.

விஜய்யின் கடைசி படம் என்பதால் திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இன்று தமிழகம் முழுவதும் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் காலை முதலே விஜய்யின் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம், ரத்தத்தால் அபிஷேகம், கேக் வெட்டி, மேளதாளங்கள் முழங்க உற்சாகத்துடன் படத்தினை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக இத்திரைப்படத்தை அனைத்து தரப்பினரும் ஏற்கனவே பார்த்துவிட்டாலும் தற்போது இத்திரைப்படத்தை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என ஆவலுடன் ரசிகர்கள் திரையரங்கில் திரண்டு வருகின்றனர்.

முன்னதாக, அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன், முகமது பர்வேஸ், துணை சபாநாயகர் ரவிசங்கர், நடிகை த்ரிஷா என தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் திரையரங்குகளில் குவிந்துள்ளனர். அதைப்போல் சட்டமன்ற உறுப்பினர்களும் தத்தம் பகுதி திரையரங்குகளில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள திரையரங்கில் திருவெறும்பூர் த.வெ.க எம்எல்ஏ நவல்பட்டு விஜி எனும் விஜயக்குமார் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார். அந்த கேக்கில் த.வெ.க கொடி பதிக்கப்பட்டிருந்த நிலையில் கேக்கின் ஓரத்தில் மட்டும் வெட்டி அதை ரசிகர்களுக்கு ஊட்டினார். தொடர்ந்து மற்றொரு சிறிய கேக் கொண்டு வரப்பட்டு அதையும் வெட்டி ரசிகர்களுக்கு கொடுத்து ஜனநாயகன் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். 

இதற்கிடையே திரையரங்கு முன்பு ஜனநாயகம் ஃபிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அந்த பிளக்ஸ் முன் விஜய் ரசிகர் ஒருவர் ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோழியை அறுத்து பலி கொடுத்தார். கோழியின் ரத்தத்தை விஜயின் முகத்தில் தெறித்தார். இவரின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நாடு முழுவதும் நீட் விவகாரத்தில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் ஜனநாயகன் திரைப்படம் வெளியானதின் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0