விஜய் பிரச்சாரத்திற்கு செக் வைத்த திருச்சி காவல்துறை; புஸ்லி ஆனந்த் மீது வழக்கு
விஜய் பிரச்சாரத்திற்கு செக் வைத்த திருச்சி காவல்துறை; புஸ்லி ஆனந்த் மீது வழக்கு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகிற 13-ஆம் தேதி திருச்சியில் பிரச்சாரப் பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில், திருச்சி விமான நிலைய போலீசார் புஸ்லி ஆனந்த், திருச்சி மாவட்ட செயலாளர் கரிகாலன் உள்ளிட்டோர் மீது இன்று மாலை வழக்கு பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் கடந்த சனிக்கிழமை சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தார்.
அப்போது சுற்றுப்பயணம் தொடர்பாக மனு அளிப்பது, காவல்துறை அதிகாரிகளை சந்தித்து அனுமதி கேட்பது, இடத்தை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை செய்வது தொடர்பாக வருகை புரிந்தார்.
புஸ்ஸி ஆனந்தை வரவேற்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் குவிந்தனர். விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் சொல்லியும் தவெக தொண்டர்கள் கலைந்து செல்லாமல் அங்கே கூட்டமாக கூடினர்.
மேலும், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற தவெகவினர் இருசக்கர வாகனத்தில் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியும், சாலையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து விமான நிலையத்திற்கு எதிரே உள்ள விநாயகர் கோயிலில் புஸ்ஸி ஆனந்த் சாமி தரிசனம் செய்ய வந்தபோது காவல்துறையினருக்கும் தவெக தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இது தொடர்பாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியும், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தும், சட்ட விரோதமாக ஒன்று கூடியும் , காவல்துறையினரிடம் வாக்கு வாதம் செய்ததாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், திருச்சி கிழக்கு மாநகர் மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட 6 பேர் மீது திருச்சி விமான நிலைய காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜய் 13 ஆம் தேதி திருச்சியில் பிரச்சாரம் செய்யவிருக்கும் நிலையில் தவெக பிரச்சார பயணத்திற்கு செக் வைக்கும் விதத்தில் திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0