நீங்க மஞ்ச பத்திரிகையா? செய்தியாளர் சந்திப்பில் கொந்தளித்த வைகோ; தள்ளு முள்ளு : போலீஸ் சமரசம்  

Jun 30, 2026 - 14:22
 0  87
நீங்க மஞ்ச பத்திரிகையா? செய்தியாளர் சந்திப்பில் கொந்தளித்த வைகோ; தள்ளு முள்ளு : போலீஸ் சமரசம்  

நீங்க மஞ்ச பத்திரிகையா? செய்தியாளர் சந்திப்பில் கொந்தளித்த வைகோ; தள்ளு முள்ளு : போலீஸ் சமரசம்  

செங்கல்பட்டில் மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் அனைத்திலும் கட்டிங்... கமிஷன்... கரப்ஷன் என்று கூறினார். அப்போது அவரிடம், கூட்டணியில் இருந்தபோது ஏன் எதிர்த்து பேசவில்லை என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

இதனால் உச்சபட்ச கோபத்திற்கு உள்ளான வைகோ குறிப்பிட்ட நாளிதழின் பெயரைச் சொல்லி மஞ்சள் பத்திரிகைதானே நீ, எழுந்து வெளியே போ வெளியேற்றுங்கள் என கொதித்து எழுந்தார். இதனால் செய்தியாளர்களுக்கும் மதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, தனிச்சின்னம் வழங்காததால் திமுக மதிமுக இடையே உரசல் இருந்தது. தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து தவெகவுக்கு ஆதரவாக வைகோவின் மகன் துரை வைகோ மற்றும் வைகோவின் கருத்துக்கள் இருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இதனால், திமுக ஆதரவாளர்கள் மதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தான் மதிமுக திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பொதுக்குழுவை கூட்டி முடிவெடுத்து அறிவித்திருந்தார் வைகோ. மேலும் கூட்டணியிலிருந்து வெளியே வந்தவுடன் திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

தவெக ஆட்சியில் ஊழல் இல்லை, கமிஷன் கேட்பதில்லை போன்ற நல்ல விஷயங்களுக்காகவும், சமூக நீதியை பின்பற்றுவது, மும்மொழி கொள்கையை எதிர்ப்பது, பேரறிஞர் அண்ணா கொள்கையை பின்பற்றி வருவது போன்ற காரணங்களுக்காக மதிமுக ஆதரவு என்ற நிலை எடுத்ததாக வைகோ கூறியிருந்தார்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி மதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது . 

இந்நிகழ்ச்சிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று நிகழ்ச்சியை துவங்கி வைத்துள்ளார். அதற்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பின்போது அவர் பேசுகையில், ”ஒரு சதுர அடிக்கு கமிஷன் வாங்கிய ஒரே கட்சி திமுகதான், லஞ்சம் ஊழலில் இருந்தது திமுக ஆட்சி தான். இவர் (முதலமைச்சர் விஜய்) ஒழிச்சிட்டாருல்ல இப்போ லஞ்சம் ஊழல் இல்லை” எனத் தெரிவித்தார்.

உடனே, செய்தியாளர் ஒருவர் இதை நீங்க கூட்டணியில் இருந்தபோது ஏன் கூறவில்லை என்று கேட்ட கேள்விக்கு கூட்டணியில் இருந்துக் கொண்டே பேசுவது தர்மம் இல்லை என்றவர், ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட நாளிதழின் பெயரைச் சொல்லி மஞ்சள் பத்திரிகை நீ வெளியே போ என உச்சபட்ச கோபத்திற்கு வைகோ சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், நீங்கள் திட்டமிட்டு கேள்வி கேட்பது போல தெரிகிறது. நீங்க எந்த பத்திரிகை சார்.. சொல்லுங்கள்.. பதில் சொல்லுங்க.. நீங்க மஞ்ச பத்திரிகையா? உங்க முதலாளி யார்.. கேஸ் போடுவேன்.. வெளியே போ என்று வைகோ கடுமையாக பேசியவர், அதோடு கோபமாக அப்படியே சீட்டில் இருந்து வெடுக்கென்று எழுந்தார். 

இதையடுத்து அந்த செய்தியாளரை அப்படியே சுத்துப்போட்ட மதிமுகவினர்.. வைகோவிடம் நீங்கள் எப்படி கேள்வி கேட்கலாம் என்று சரமாரியாக வாக்குவாதம் செய்தனர். 

இதனைத் தொடர்ந்து வைகோவுக்கும் சக பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம் நீடித்தது. ஒரு கட்டத்தில் மதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களை தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களை தரக்குறைவாக தகாத வார்த்தைகள் சொல்லி பேசியதால் செய்தியாளர்களுக்கும், மதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது. இதனை தவிர்க்கும் விதமாக காவல்துறை செய்தியாளர்களை தாக்க முயன்ற மதிமுக நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி செய்தியாளர்களை வெளியேற்றினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0