அரியமங்கலம் குப்பை கிடங்கு குப்பைகளை துவாக்குடி கல்குவாரியில் கொட்டலாம் ; எம்எல்ஏ பேச்சுக்கு எதிராக இணையத்தில் எதிர்ப்பு குரல்  

May 27, 2026 - 14:11
 0  161
அரியமங்கலம் குப்பை கிடங்கு குப்பைகளை துவாக்குடி கல்குவாரியில் கொட்டலாம் ; எம்எல்ஏ பேச்சுக்கு எதிராக இணையத்தில் எதிர்ப்பு குரல்  

அரியமங்கலம் குப்பை கிடங்கு குப்பைகளை துவாக்குடி கல்குவாரியில் கொட்டலாம் ; எம்எல்ஏ பேச்சுக்கு எதிராக இணையத்தில் எதிர்ப்பு குரல்  

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரியமங்கலம் மாநகராட்சி குப்பை கிடங்கில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இதனால் அரியமங்கலம் குப்பை கிடங்கி சுற்றி வசிக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் காச நோய்க்கு உட்பட்டு சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் அரியமங்கலம் மாநகராட்சி குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கல்குவாரி குழியில் கொட்டுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி நேரில் ஆலோசனை மேற்கொண்டார். இது குறித்த விபரம் வருமாறு ;

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலத்தில் திருச்சி மாநகராட்சி குப்பைக்கிடங்கு சுமார் 50 ஆண்டுகளாக 50 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது.

இந்த குப்பை கிடங்கில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால், அதனை அப்புறப்படுத்த முடியவில்லை காரணம் 7லட்சம் மெட்ரிக் டன் குப்பை சேர்ந்துள்ளது. இப்படி குப்பைகள் அளவுக்கு அதிகமாக சேரும் பொழுது, சில விஷமிகள் குப்பைக் கிடங்கில் தீ வைப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படி தீ வைக்கும் பொழுது அதில் ஏற்படும் புகை திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மற்றும் குப்பை கிடங்கை சுற்றி உள்ள பகுதிகளில் பரவுவதால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மூச்சு திணறல், கண் எரிச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி ஆஸ்துமா, காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

இதனால் இந்த குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென தொடர்ந்து தமிழக அரசை அப்பகுதி மக்களும், திருச்சி தஞ்சை வாகன ஓட்டிகளும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 அதே நேரம் இந்த குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் அகற்றப்படும் என அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுப்பதும், அதை நிறைவேற்றாமல் போவதும் வாடிக்கையாகவே உள்ளது.

இந்த நிலையில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக கட்சி வேட்பாளரான நவல்பட்டு விஜி தாம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் வேலையாக அரியமங்கலம் குப்பைக்கிடங்கு முற்றிலுமாக அகற்றப்படும் என தொகுதி மக்களிடம் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார். அவரது வாக்குறுதியை நம்பி பொதுமக்களும் அவரை தேர்ந்தெடுத்தனர். 

 

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற சில நாட்கள் கழித்து அரியமங்கலம் குப்பை கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி, அரியமங்கலம் குப்பை கிடங்கில் மலைபோல் தேங்கி உள்ள குப்பைகளை உடனடியாக அள்ளி துவாக்குடி நகராட்சி பகுதியில் பயன்பாடற்றுகிடக்கும் கல்குவாரியில் கொட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

அப்பொழுது மாநகராட்சி அதிகாரிகள் இங்கு தற்பொழுது 7 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் இருந்த நிலையில், தற்போது ஆறு லட்சம் மெட்ரிக் டன் உள்ளது. ஒரு நாளைக்கு 850 டன் குப்பை வந்து சேருவதாகவும் ஆனால் இங்கு ஆயிரம் டன் குப்பைகள் நாள்தோறும் மறு சுழற்சி செய்யப்படுவதாகவும், இந்த குப்பைகளை இங்கிருந்து மறுசுழற்சி செய்து எடுத்து செல்ல தனியார் நிறுவனத்திற்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு ரூ. 40 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒன்னேகால் ஆண்டுகள் அந்த ஒப்பந்தம் உள்ளது என்றும் கூறினர்.

இவற்றைக் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது;

இந்த குப்பை கிடங்கு பிரச்சனை இன்னைக்கு நேத்து வந்தது இல்ல. 50 ஆண்டு காலப் பிரச்சனை இது அரசியல்வாதிகளோட சுயநலத்திற்க தீர்க்கப்படவில்லை.

மாநகராட்சியிலிருந்து வர்றது நாள் ஒன்றுக்கு 850 டன் குப்பை ஆகும், இங்கு நாள் ஒன்றுக்1000 டன் மறுசுழற்சி பண்றதுக்கான வசதி இருக்கு. 

அதனால் மீதி இருக்கிற குப்பை அப்படியேதான் இருக்கு. அதை ஒரு கான்ட்ராக்ட் நிறுவனத்திற்கு ரூ.40 கோடிக்கு கொடுத்திருக்காங்க. அந்த கான்ட்ராக்ட்காரன் வந்து இரண்டு வருடம் அக்ரிமெண்ட் போட்டு, அதை அவர் சலிச்சு இந்த குப்பையையும், பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணையும் கொண்டு அப்படியே வெளில எடுத்துட்டு போகணும்ங்கிறதுதான் கான்ட்ராக்ட். இப்ப இது வரையிலும் கான்ட்ராக்ட் கொடுத்ததுல ஒரு பெரிய வளர்ச்சி இல்லை.

இந்நிலையில் ஏற்கனவே ரூ.40 கோடி கொடுத்து அது ஒண்ணுமே நடக்கல. அடுத்து ரூ.25 கோடி ஒதுக்குனாங்க அதுவும் நடக்கல. அப்படி ஒதுக்கிய நிதி யார் கிட்ட போகுது, இந்த பணம் யார் எடுத்துட்டு போறாங்கன்னு கணக்கு தெரியாம போயிட்டு இருக்குது.

எங்களுடைய தலைவர் முதலமைச்சர் விஜய் மூலம் இதுக்கு ஒரு தீர்வு வரணும். நான் சட்டமன்ற வேட்பாளரா நிக்கும்போது என்னுடைய முதல் வாக்குறுகி இதுதான். அதன் அடிப்படையிலதான் இன்னைக்கு வந்து இதை ஆய்வு பண்ணிருக்கோம். எல்லா துறையும் கிளீனா இருக்கும் ஆட்சி நடந்திட்டு  இருக்கு இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுக்கு ஒரே வழி, துவாக்குடி கல்குவாரி தான். இந்த பாறைக்குழிகளில் கிட்டத்தட்ட 1200 அடி பள்ளம் இருக்கு. அதுல கொண்டு போய் கொட்டலாம் இது யாருக்கும் எந்த பாதிப்பும் வரப்போறது இல்லை. இதைவிட சுற்றுச்சூழல் பாதிப்பு அங்க வராது. இங்கு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவது தடுக்கப்படும், அதேபோல அங்குள்ள கல்குவாரியில் மனிதர்களும், கால்நடைகளும் விழுந்து இறப்பது தவிர்க்கப்படும்.

இது சம்பந்தமாக மாநகராட்சி ஆணையர் மற்றும் கலெக்டரிடம் பேசியுள்ளேன். இதன் மூலம் உயிர் பயத்தை ஏற்படுத்தும் குவாரிகளும் மூடப்படும், குப்பைகளும் குப்பை கிடங்கில் தேங்காமல் இருக்கும். குப்பைகளை நேரடியாக குவாரியில் கொட்டுவதால் 30 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் எனவும், இதற்கு மாநகராட்சி ஆணையர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். 

இந்நிலையில் இதுதான் சமூகவலைதளங்களில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. வைகை அணையை தெர்மாகோல் கொண்டு மூடுவதற்கு இணையானது அவரது ஐடியா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

மக்கிப்போன குப்பைகளை மறுசுழற்சி செய்யாமல். கல்குவாரி கிடங்குகளில் கொட்டினால் நிலத்தடி நீர் மாசுபட்டு உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்கிற அடிப்படை அறிவு தவெக எம்.எல்.ஏவுக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், அதிமுகவின் செல்லூர் ராஜூவைப் போல இவரது ஐடியா இருக்கிறது என விமர்சிக்கின்றனர்.

இதை பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். இவரு நாசாவில் இருக்க வேண்டியவரு.. குப்பையை கொட்டி அது உள்ள ஊறினா மொத்த நிலத்தடி நீர்மட்டமும் விஷமாகிவிடும்.. இப்படி எல்லாம் பேசக்கூடாது' என நெட்டிசன்கள் எம்எல்ஏவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0