திருவெறும்பூர் தொகுதியில் ஹாட்ரிக் எம்.எல்.ஏ,வாக வலம் வருவாரா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி?

Feb 10, 2026 - 17:26
Feb 10, 2026 - 18:54
 0  65
திருவெறும்பூர் தொகுதியில் ஹாட்ரிக் எம்.எல்.ஏ,வாக வலம் வருவாரா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி?

திருவெறும்பூர் தொகுதியில் ஹாட்ரிக் எம்.எல்.ஏ,வாக வலம் வருவாரா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி?

 

காவிரி ஆறும், உய்யக் கொண்டான் மேட்டு கட்டளை வாய்க்கால்களும் வளம் கொழிக்க வைக்கும் தொகுதியாக திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி இருக்கின்றது. திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி.

 திருவெறும்பூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் விளைகிறது. திருநாவுக்கரசரால் பாடல்பெற்றதும், தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவத்தலமான எறும்பீஸ்வரர்கோவில் இந்தத் தொகுதியில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானை கான தினம்தோறும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில், நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வர்.

 

அதேபோல், பாரதமிகு மின் நிறுவனம், இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் படைக்கலன் தொழிற்சாலை (ஓஎப்டி,), கனரக உலோக தொழிற்சாலை(எஸ்எஸ்டிபிபி), மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பொன்மலை ரயில்வே பணிமனை ஆகியவைகள் இத்தொகுதியில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலைகளில் திருச்சி மட்டுமல்லாது நாடு முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

  பல்லாயிரம்பேருக்கு வேலை தரும் இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி, இவற்றை நம்பி செயல்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். 

 அதேநேரம், கொரோனா காலத்திற்குப் பிறகு இத்தொகுதியில் பெல் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள் போதிய பணி ஆணையின்றி மூடப்பட்டதால் பல ஆயிரம் பேர் வேலை இழந்து, தவித்தும் வருகின்றனனர்.

 

திருச்சி மாவட்டத்திலேயே ஜல்லிக்கட்டிற்கு பெயர் பெற்ற சூரியூர் இத்தொகுதியில்தான் அமைந்துள்ளது. மேலும் நவல்பட்டு தொழில்பூங்கா. துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம், ஐஐஎம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அரசு ஐடிஐ, துவாக்குடி அரசு கல்லூரி போன்ற தலை சிறந்த மத்திய, மாநில கல்வி நிறுவனங்களையும் இத்தொகுதி பெற்றுள்ளது. 

 பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கியூர், பத்தாளப்பேட்டை, அகரம், எல்லக்குடி, ஆலத்தூர், கிழக்குறிச்சி, கீழக்கல் கண்டார்கோட்டை, சோழமாதேவி, வாளவந்தான் கோட்டை, திருநெடுங்குளம், அசூர், எலந்தப்பட்டி, கும்பக்குடி, குண்டூர், சூரியூர், காந்தலூர் ஆகிய கிராமங்களும், மாநகராட்சிக்குட்பட்ட அம்பிகாபுரம், பாப்பாக்குறிச்சி, காட்டூர், திருவெறும்பூர், கூத்தப்பார், கிருஷ்ண சமுத்திரம், துவாக்குடி என 16 மாநகராட்சி கவுன்சிலர்களை உள்ளடக்கிய தொகுதியாகவும், இவற்றில் பெரும்பான்மையான மாமன்ற உறுப்பினர்கள் திமுகவினர் மற்றும் கூட்டணிக்கட்சியினரை கொண்ட தொகுதியாக திமுகவுக்கு வலு சேர்க்கும் தொகுதியாக திருவெறும்பூர் தொகுதி விளங்குகின்றது.

  இத்தொகுதியில் தி.மு.க. 7 முறையும், அ.தி.மு.க. 3 முறையும், காங்கிரஸ், தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளன. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் களம் கண்ட திமுகவின் மூத்த தலைவரான அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியே இந்தமுறையும் களத்தில் களமாடயிருக்கின்றார்.

 அதிமுக சார்பில் ப.குமார் களம் இறங்குகிறார். மணப்பாறையையும் அவர் கேட்டிருப்பதால் திருவெறும்பூர், மணப்பாறை இவை இரண்டில் ஒன்றில் ப.குமார் களமிறங்கலாம். 

 ப.குமார் மணப்பாறை தொகுதிக்கு மாறினால் அதிமுக சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி அல்லது தெற்கு ஒன்றிய செயலாளர் இராவணன் இருவரில் ஒருவர் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு. அதேநேரம் பாஜக கூட்டணிக்கு தேமுதிக சென்றால் முன்னாள் எம்.எல்.ஏ செந்தில்குமாருக்கோ அல்லது டி.வி.கணேஷ்க்கோ வாய்ப்பு கொடுக்கப்படலாம். 

 

திருவெறும்பூா் முன்னாள் திமுக தெற்கு ஒன்றியச் செயலா், பூலாங்குடி காலனியைச் சோ்ந்த ச.விஜயகுமார் என்கிற நவல்பட்டு விஜி, தற்போதைய அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி, கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டு திமுகவில் இருந்து கடந்த 2021-ல் நீக்கப்பட்டார். இருந்தபோதும் திமுக அபிமானியாகவே தொடர்ந்து செயல்பட்டு, தமது பகுதி மக்களுடன் மிகுந்த செல்வாக்கைப்பெற்றவராகவே இப்போதும் இருக்கின்றார். 

 கடந்த 2021-ல் நடைபெற்ற தேர்தலில் நவல்பட்டு விஜிக்கும்-மகேஷ்க்கும் முட்டல் மோதல் இப்போதும் தொடர்வதால் மகேஷ்க்கு எதிராகவே தொடர்ந்து காய் நகர்த்தி வருகின்றார்.

 இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நவல்பட்டு விஜியை விசில் கட்சியும், இலைக்கட்சியும் மாறி மாறி அழைத்திருந்தாலும், இறுதியில் விசில் கட்சிக்கு இவர் செல்வதாக கூறப்படுகின்றது. 

   விசில் கட்சிக்கு நவல்பட்டு விஜி செல்லும் பட்சத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவருக்குமிடையே "உள்ளூர்ப் பூனை, அசலூர் ஆனை"யாக திருவெறும்பூர் தொகுதியில் மகேஷ் பொய்யாமொழிக்கு டப் கொடுக்கும் வேட்பாளராகவே நவல்பட்டு விஜி வலம் வருவார்.

  நாம் தமிழர் கட்சி வேட்பாளராக  வி சோழசூரன் கடந்த முறை போட்டியிட்டு பெருவாரியான வாக்குகளை பிரித்த நிலையில், இந்த முறை ஜல்லிக்கட்டு பேரவை ராஜேஷ் களம் இறங்கி இருந்தாலும் கடந்த தேர்தலைப் போன்று பெருவாரியான வாக்குகளை பெருவது சிரமம் என்கின்றனர் அப்பகுதியினர்.

 தற்போது நவல்பட்டு விஜி தவெகவுக்கு சென்றால் விசில் சத்தம் தொகுதியில் கொஞ்சம் கேட்கும் என்ற நிலையில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே நேரடி போட்டி தொகுதியில் நிலவி வருகின்ற நிலையில், திருவெறும்பூர் தொகுதியின் ஹாட்ரிக் எம்.எல்.ஏ-வாக தொகுதியை தக்கவைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

 

அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றியிருப்பதாகவே தெரிவிக்கின்றார். திருவெறும்பூர் தொகுதியில் பிரம்மாண்ட ஒலிம்பிக் ஸ்டேடியம் கட்டுமானப்பணி நிறைவடைய இருக்கின்றது. காட்டூர் பாப்பாகுறிச்சியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. 

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரியூரில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறு விளையாட்டரங்கம், ஜல்லிக்கட்டு மைதானம் கொண்டு வந்தது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தனிப்பட்ட சாதனை.

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 54,676 பரப்பளவில் மாதிரி பள்ளி சுமார் ரூ.57.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு மாணவர்கள் 20 வகையான நுழைவுத்தேர்வுக்கு திறம்பட சென்று வெற்றி பெரும் வாய்ப்பை தொகுதியில் உருவாக்கித் தந்திருப்பது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வலு சேர்க்கின்றது. 

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட ஊராட்சி மற்றும் மாநகரத்தில் பெரும்பான்மையானோர்க்கு பட்டா கொடுத்திருப்பதும், நியாய விலை கடை, நூலகம் என பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருப்பதும் அவருக்கு ப்ளஸ் ஆகும். 

 பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்கப்படாததால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு சுமார் 250-க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகியிருப்பதால், சர்வீஸ் சாலை அல்லது உயர்மட்ட சாலை கோரிக்கை கடந்த தேர்தலிலேயே வலுத்த நிலையில், தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான அன்பில் மகேஷ்பொய்யாமொழி கொடுத்த சர்வீஸ் சாலை வாக்குறுதி 5 ஆண்டுகளை கடந்தும் வாக்குறுதியாகவே இருப்பது சோதனையிலும், வேதனை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இப்பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கடைகள் மற்றும் வீடுகளை இடிக்காமல் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வணிகர்களும் போராடி வருகின்றனர்.

  பரப்பளவு அடிப்படையில் நகரமும், கிராமமும் கலந்த தொகுதியாக இருப்பதால் இங்கு வழக்கம்போல சாலை, குடிநீர் தட்டுப்பாடு, தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு குறைவில்லை என்றாலும், தற்போது இவற்றில் 70 சதவீதம் தீர்க்கப்பட்டிருப்பதாக பொதுமக்களே தெரிவிப்பது அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ப்ளஸ். 

 திருச்சியின் புறநகராக இருந்த அரியமங்கலம் இன்று நகரின் ஒரு அங்கமாக மாறியுள்ள நிலையில் 47.8 ஏக்கரில் குடியிருப்பு மற்றும் பள்ளிகளுக்கு அருகே செயல்படும் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கின் துர்நாற்றம் மற்றும் புகையால், அரியமங்கலம், மேல அம்பிகாபுரம், திடீர் நகர், ரயில் நகர் பகுதி பொதுமக்கள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அவ்வப்போது இன்னலுக்கு ஆளாவது தொடர்கதையாகத்தான் இருக்கின்றது.

 அரியமங்கலத்தின் அடையாளமாக மாறிப்போன குப்பைக்கிடங்கில் 75 வருடங்களாக மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகளில் சுமார் 10 லட்சம் டன் கழிவுகள், ரூ.44 கோடி மதிப்பீட்டில் பயோமைனிங் முறையில் நடைபெற்று வந்தாலும் குப்பைகள் மலைபோல் குவிவது குறைந்தபாடில்லை.

 

கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதி மக்களுக்கு சொன்ன வாக்குறுதியில் நிறைவேறாதவைகளில் அரியமங்கலம் குப்பைக் கிடங்கை முற்றிலும் அகற்றுவேன் என்று சொன்னதும், பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான சர்வீஸ் சாலை அமைப்பேன் என்பதுமே.

     திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப குட்புக்கில் நிறந்தர அங்கம் வகிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 2016-ல் 85,950 வாக்குகளுடன் 46.98 சதவீதம் பெற்றார். 2021-ல் கணிசமான உயர்வுடன் 105,424 வாக்குகளுடன் 53.51 சதவீதம் பெற்றிருக்கின்றார். 

   கடந்த 1967 முதல் 2021 வரை நடைபெற்ற தேர்தல்களில், 1996-ல் நடைபெற்ற தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட துரை சுமார் 62.60 சதவீதத்துடன், சதவீத அடிப்படையில் முன்னணியில் இருந்தாலும், கடந்த 2021 தேர்தலில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியே 105,424 வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்றடிப்படையில் முன்னணியில் இருக்கின்றார். இந்த வாக்குகளை தக்கவைப்பாரா என்பது வரும் 2026 முடிவுகளில் தெரியவரும்.

   திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய நிலவரப்படி கடந்த வாக்குகளை தக்க வைப்பாரா என்ற கேள்வியும், தொடர்ந்து 3-வது முறையாக ஹாட்ரிக் எம்.எல்.ஏ,வாக வலம் வருவாரா  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி?

இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:

1967- வி.சுவாமிநாதன் (காங்கிரஸ்)

1971- காமாட்சி (தி.மு.க.)

1977- முருகேசன் (அ.தி.மு.க.)

1980- குருசாமி (எ) அண்ணாதாசன் (அ.தி.மு.க.) 

1984- குருசாமி (எ) அண்ணாதாசன் (அ.தி.மு.க.) 

1989- பாப்பா உமாநாத் (இ.பொ. கட்சி) 

1991- ரத்தினவேல் (அ.தி.மு.க.)

1996- கே.துரை (தி.மு.க.) 

2001- கே.என்.சேகரன் (தி.மு.க.) 

2006- கே.என்.சேகரன் (தி.மு.க.) 

2011- செந்தில்குமார் (தே.மு.தி.க.) 

2016 - அன்பில் மகேஷ் பொய்யாமொழி (தி.மு.க.)

2021 - அன்பில் மகேஷ் பொய்யாமொழி (தி.மு.க.)

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0