பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சி, “பிரதமர் வர வேண்டாம்” என்று அவைத் தலைவர் சொல்வது பெரும் அவலம்: விருதுநகர்
விருதுநகர் இளைஞரணி மாநாட்டில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி பேசுகையில், உழைப்பு, உழைப்பு என்ற வார்த்தைக்கு உதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் முதல்வர். பாசிக சக்திகளை எதிர்க்கக்கூடிய தலைவரும் நான்தான் என்ற உறுதியோடும் வாழ்கிறார் முதல்வர் ஸ்டாலின். தென்தமிழ்நாட்டின் எஃகு மனிதர் என்று எல்லோரும் பாராட்டக்கூடிய தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
யாரோடு இருந்தால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்குமென்று பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் தெளிவாகத் தெரியும். முதல்வருடன் பெண்களும், இளைஞர்களும் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டத்தை பார்க்கும்போது உதயநிதிக்கு வாழ்த்து மட்டும் சொல்லத் தோன்றவில்லை. வெற்றி நமது, வெற்றி நமது, என சொல்லத் தோன்றுகிறது.
திமுக வெற்றியை உறுதி செய்யும் மாநாட்டை உதயநிதி நடத்திக்கொண்டிருக்கிறார். துரோகத்தோடு கைகோத்துக் கொண்டு நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகியிருக்கிறது. அதிமுக அல்ல பாஜக தலைமையிலான கூட்டணி. தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள துரோகத்தோடு கூட்டணி வைத்துள்ளனர்.
தேர்தல் வருகிறது என்றாலும் தமிழ்நாட்டுக்கு அள்ளி அல்ல கிள்ளிகூட கொடுக்க மாட்டேன் என கூட்டணி. டிரம்ப் உடன் வர்த்தக ஒப்பந்த மாற்றத்தைக் கொண்டு வருவதாக பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் நாம் அனுப்பக்கூடிய பொருள்களுக்கு அமெரிக்காவில் 18% வரி, அங்கிருந்து வரக்கூடிய பொருள்களுக்கு வரியே கிடையாது. இது எதற்கும் பிரதமர் மோடி பதில் சொல்லமாட்டார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு வழக்கமாக பிரதமர் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இந்த முறை பிரதமர் வரவில்லை. காரணம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது “நீங்கள் எங்கு இருந்தீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் சொல்ல பிரதமர் தயாராக இல்லை. இதன் காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், பிரதமர் அவர்கள் ஏதாவது வந்து பதில் சொல்லுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் வரவில்லை. அவைத் தலைவர், “பிரதமர் வரமாட்டார்; பதில் சொல்ல மாட்டார்” என்று தெரிவித்தார். அதாவது, நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக, குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் பதில் சொல்லாமல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி, பாஜக ஆட்சிதான்.; நரேந்திர மோடி ஆட்சிதான்..
அதற்கு அவர்கள் சொன்ன பதில்: “விஷ்வகுரு.” சாதாரண பிரதமர் அல்ல நரேந்திர மோடி; விஷ்வகுரு என்று அவர்களும், அவர்களுடைய கட்சியும் போற்றிக் கொண்டிருக்கும் ஒருவர். அவரே சொல்கிறார், “நான் என் அம்மாவுக்கு மட்டும் பிறந்தவன் இல்லை; கடவுளால் அனுப்பப்பட்டவன்” என்று.
அப்படிப்பட்ட கடவுள் அனுப்பிய குழந்தை, நாடாளுமன்றத்தில் வந்து ஏன் பதில் சொல்லவில்லை தெரியுமா? எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய பெண்கள் அவரை அச்சுறுத்தி விடுவார்கள் என்ற பயத்தில், எதிர்க்கட்சியில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சி, “பிரதமர் வர வேண்டாம்” என்று அவைத் தலைவர் சொல்லியதாக தெரிவிக்கப்படுகிறது என்றால், நாம் எப்படிப்பட்ட அராஜக ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதை எதிர்த்து கேள்வி கேட்டு,ஒரு மாற்றத்தை கொண்டு வரக்கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தவிர வேற யாரு இல்லை என்று தமிழ்நாடு உணர்ந்துகொண்டு இருக்கின்றது.
இங்கே இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒபாமா அவர்கள் அமெரிக்க ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னர், “Yes, You Can” என்றார். இளைஞர்கள் கேட்கலாம், எங்களால் இந்த நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியுமா என்று. ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக் கொண்டபோது அவரது வயது 47. தலைவர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டபோது அவரது வயது 44.
பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியபோது அவருக்கு வயது 40. நாவலர் நெடுஞ்செழியன் 30 வயதில் இருந்தார். தலைவர் கலைஞர் 25 வயதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டபோது 27 வயதில் இருந்தார். உங்களால் முடியும்; உங்களைத் தவிர வேறு யாராலும் முடியாது. “Yes, You Can”என்று பேசினார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0