திருச்சியில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்: 11,000 பேருக்கு பணி நியமன ஆணை

Feb 7, 2026 - 21:30
 0  19
திருச்சியில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்: 11,000 பேருக்கு பணி நியமன ஆணை

திருச்சியில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்: 11,000 பேருக்கு பணி நியமன ஆணை

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேர் கல்லூரியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னெடுப்பிலும்,கிவ் லைஃப் (Give Life) மற்றும் தி ரைஸ் (The Rise) அறக்கட்டளைகளின் ஒருங்கிணைப்பில் பிரம்மாண்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் 17,000-க்கும் மேற்பட்ட வேலை தேடும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

டாட்டா எலக்ட்ரானிக்ஸ், ஸ்னைடர் எலக்ட்ரிக், MRF, ஹூண்டாய், யூனோ மிண்டா மற்றும் திருச்சியின் முன்னணி நிறுவனமான வி.டாட் (V.Dot) உள்ளிட்ட 327 நிறுவனங்கள் கலந்து கொண்டன. மொத்தம் 21,000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுடன் நிறுவனங்கள் வருகை தந்திருந்தன. பங்கேற்றவர்களில் சுமார் 11,000 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று நடைபெற்ற நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று பணி பெற்றவர்களுக்கு தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

மேலும் பலர் இரண்டாம் சுற்று நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முகாமில் 10,000-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கலந்து கொண்டது, சமூகத்தில் பெண்களின் பொறுப்புணர்வையும் முன்னேற்றத்தையும் பறைசாற்றுவதாக அமைந்தது. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை ஊதியம் வழங்கும் 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றது இம்முகாமின் தனிச்சிறப்பாகும். 

திருச்சி மட்டுமன்றி தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், பெரம்பலூர், மதுரை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்ட இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றதால், இது காவிரி நிலப்பரப்பின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு திருவிழாவாக மாறியது.

இம்முகாமில் வேலை கிடைக்காத இளைஞர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களையும் வேலையில் அமர்த்த கிவ் லைஃப் மற்றும் தி ரைஸ் அறக்கட்டளைகள் முயற்சி மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, கேர் கல்லூரி நிர்வாக இயக்குனர் பிரதீப் செந்தில், மாருதி மருத்துவமனை நிர்வாகி டாக்டர் ஆனந்த், ரைஸ் இயக்கத்தின் தலைமை பொறுப்பாளர் ஜெகத் கஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

க. சண்முக வடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0