எடப்பாடி பழனிசாமிதான் இன்றைக்கு இந்தியாவிலேயே பாஜகவுடைய 'முரட்டு அடிமை'- பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்

Feb 15, 2026 - 18:52
 0  3
எடப்பாடி பழனிசாமிதான் இன்றைக்கு இந்தியாவிலேயே பாஜகவுடைய 'முரட்டு அடிமை'- பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமிதான் இன்றைக்கு இந்தியாவிலேயே பாஜகவுடைய 'முரட்டு அடிமை'- பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது; பட்டுக்கோட்டை மிக நீண்ட பாரம்பர்யம் கொண்ட ஊர். மிக வேகமாக வளர்ந்து வரும் நகராட்சியாகத் திகழ்கிறது. ஆனால், இந்த நகரத்தின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கின்ற வகையில் ஒரு பேருந்து நிலையம் இல்லை. திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, இந்நகரின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம்தான் இந்தப் பேருந்து நிலையம்.

இந்நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருதி, இந்தப் பேருந்து நிலையம் தாராளமான இட வசதியோடு, அதிநவீனமான கட்டமைப்பு வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. தமிழகமுதல்வரைப் பொறுத்தவரைக்கும், "எல்லா ஊருக்கும் எல்லாம்" என்ற கொள்கையில் அனைத்து ஊர்களிலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில், பட்டுக்கோட்டை நகராட்சி முழுவதும் சுமார் 35 கிலோமீட்டர் நீளத்திற்குத் தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சியில் உள்ள குளங்கள் 7.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய சந்தை, புதிய பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. 5.00 கோடி ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், 22.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகளுக்குப் புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் எல்லாம் கட்டப்பட்டுள்ளன.1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் கொண்டிருக்கக்கூடிய புதிய அறிவுசார் மையம் என இந்தப் பட்டுக்கோட்டை நகராட்சியின் வளர்ச்சிக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு இன்று பல்வேறு பணிகளைச் செய்துள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தின் மூலமாக 30 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். 60 ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வழங்கப்படுகிறது. 32,000 மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். 35,000 கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரியான உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஒரு புறமும், மறுபுறம் பொதுமக்களுடைய நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நம்முடைய முதல்வர் செய்து வருகிறார்.

இவை அனைத்தையும் விட மிக மிக முக்கியமான ஒரு திட்டம், இங்கே இவ்வளவு மகளிர் வந்திருக்கிறீர்கள், உங்களுடைய ஒவ்வொருவருடைய முகத்திலும் மகிழ்ச்சி தெரிகிறது. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திட்டம், அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். ஆட்சிப் பொறுப்பேற்கும்போது நம்முடைய தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருந்தோம். 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நம்முடைய முதலமைச்சர் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாதமும் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு அந்தத் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இந்த மாதம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதங்களுக்குச் சேர்த்து 3,000 ரூபாய், அதோடு சேர்த்து கோடைக்கால சிறப்புத் திட்டம் என 2,000 ரூபாய் சேர்த்து மொத்தம் 5,000 ரூபாயை இன்று நம்முடைய முதலமைச்சர் மகளிருக்குக் கொடுத்திருக்கிறார். இன்று இந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப் பலர் திட்டமிட்டார்கள். இந்தச் சூழ்ச்சிகளையெல்லாம் நம்முடைய முதலமைச்சர் தகர்த்தெறிந்து இன்று 5,000 ரூபாயை மகளிருக்கு கொடுத்திருக்கிறார். இப்படி மக்கள் நலத் திட்டங்களாக இருந்தாலும் சரி, பேருந்து நிலையம் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளைச் செய்வதாக இருந்தாலும் சரி, நம்முடைய திராவிட மாடல் அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இன்று புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையத்தைப் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். மிக முக்கியமாக இந்த பேருந்து நிலையத்தை சுகாதாரமாக, தூய்மையாகப் பராமரிக்க நகராட்சிக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இனி இந்த மாதிரியான வளர்ச்சிப் பணிகள் தொடர வேண்டும், தமிழ்நாடு மேன்மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறி விடைபெறுகிறேன் எனப் பேசினார்.

முன்னதாக, திமுக பிரமுகர் பழஞ்சூர் செல்வம் இல்லத் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ''தமிழ்நாடு இந்தியாவிலேயே 11.19% வளர்ச்சியோடு இன்றைக்கு முதல் மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக அரசுஎவ்வளவோ சதித் திட்டங்களைத் தீட்டுகிறது.

நிதி உரிமையைப் பறிக்கின்றார்கள். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம் கூட கிடையாது. ஆனால் இந்தப் பட்ஜெட்டை அதிமுகவினர் வரவேற்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமிதான் இன்றைக்கு இந்தியாவிலேயே பாஜகவுடைய 'முரட்டு அடிமை'. ​ஜாடிக்கு ஏத்த மூடின்னு சொல்லுவாங்க, இன்றைக்கு மோடிக்கு ஏத்த மூடியாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.

இனிமேல் 10 தோல்வி பழனிசாமியும், மொத்த தோல்வி மோடியும் என்னதான் பாடுபட்டாலும் தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நம்பிக்கையைப் பெற முடியாது. எனவே, மீண்டும் அமையப் போறது திமுக அரசுதான்'' என்றார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி.செழியன், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதயநிதியை வரவேற்கும் விதமாக சாலையின் ஒரு பகுதியை இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாழை மரங்கள் மற்றும் கரும்பால் அலங்காரம் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்தும் முடியாமலும் வாழைத்தார் மற்றும் கரும்பை கட்சியினர், பொதுமக்கள் எடுத்துச் சென்றனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0