திருச்சி கிழக்கு தொகுதியில் மு. க.ஸ்டாலின் போட்டியா?

May 14, 2026 - 22:41
May 14, 2026 - 23:22
 0  76
திருச்சி கிழக்கு தொகுதியில் மு. க.ஸ்டாலின் போட்டியா?

திருச்சி கிழக்கு தொகுதியில் மு. க.ஸ்டாலின் போட்டியா? 

முதல்வர் விஜய் தான் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய் இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார்.

இதையடுத்து, முதல்வர் விஜய் கடந்த 10-ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் திருச்சி கிழக்கு தொகுதியை காலியானதாக இன்று அறிவித்தது. இதுதொடர்பான அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் வெளியாகியுள்ளது.

பொதுவாக, ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, வரும் நவம்பருக்குள் திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக, திமுக யாரை வேட்பாளராக நிறுத்தவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று காலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்ததை தொடர்ந்து, இன்று மாலை திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில், திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததற்காகக் கழகத் தலைவருக்கு இந்தச் செயற்குழு நன்றி தெரிவிக்கிறது.

மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கான உரிமைத் தொகையை மே 15-ஆம் தேதி (நாளை) வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் உடனடியாக அதனை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

வாக்காளர்களுக்கு நன்றி: 

திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளில் கழக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்குச் செயற்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

சட்டமன்றத்தில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும், அளித்த வாக்குறுதிகள் (மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு, இலவசப் பேருந்து பயணம், 6 சிலிண்டர்கள் போன்றவை) குறித்தும் கேள்வி எழுப்பி, மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட்ட எதிர்க்கட்சித் தலைவருக்குப் பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன், மாநிலங்கள்ளவை உறுப்பினர் கவிஞர் சல்மா, தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ், மாநில அணி நிர்வாகி செந்தில் மற்றும் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகச் செயலாளர் அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக, சிறப்பு தீர்மானமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என செயற்குழுவில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0