திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? சகாயம் ஐஏஎஸ்-ன் பதில் இதுதான்
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? சகாயம் ஐஏஎஸ்-ன் பதில் இதுதான்
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல்வர் விஜய், அந்த தொகுதியில் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தவெக தலைவர் விஜய். இந்த சூழலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பதற்கு முன்பாக திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை இன்று, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் ஆகியோர், சட்டப்பேரவை முதன்மை செயலாளர் கி.சீனிவாசனிடம் வழங்கினார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் சகாயம் ஐஏஎஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்; விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஊழல் மிகுந்த அமைப்புகளில் இருந்தது போன்று நமது ஆட்சியில் தவறுகளை அனுமதிக்க மாட்டேன் என்று விஜய் பகிரங்கமாக அறிவித்திருப்பது, பெரிய நம்பிக்கையும், பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, மக்களை போல நானும் எதிர்ப்பார்க்கிறேன்.
2010 ஆம் ஆண்டுக்கு முன்பாக இந்த கனிமவளக் கொள்ளையை இந்தியாவின் மிகப் பெரிய கிரானைட் ஊழலை நான் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் நமது அமைப்பு ஊழல் மிகுந்த மோசமான அமைப்பாக இருக்கிறது என சொன்னால் இன்று வரை சிறு துளி கூட நகரவில்லை.
நான் இந்த தமிழ்ச் சமூக பணிக்கு எனது பங்களிப்பை தொடர்ந்து ஆற்றுவேன். தமிழக அரசு 10 லட்சம் கோடி கடனில் இருக்கிறது என்பது யதார்த்தம். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த கடனுக்கான வட்டியையே பெருந்தொகையாக செலுத்த வேண்டியது உள்ளது என்பதும் யதார்த்தம்.
முதல்வர் என்பது சவாலான பணி, செலவினங்களை குறைத்து ஊழலை அகற்றி நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணித்தால் ஒரு காலகட்டத்தில் கடனை அகற்றிவிடலாம்.
கடந்த திமுக அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன் என விஜய் சொன்னதை நான் வரவேற்கிறேன். எவ்வளவு காலத்தில் இதை வெளியிடுவார்கள் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
திருச்சி கிழக்கில் சகாயம் ஐஏஎஸ் போட்டியா?
பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இப்படி ஏன் கேட்கிறீர்கள் என்று சிரித்தப்படியே சற்று நேரம் அமைதியாக இருந்தார். பிறகு தொடர்ந்து பேசிய அவர், நான் இந்த சமூகத்தில் பிறந்திருக்கிறேன். என்னை உருவாக்கிய இந்த சமூகத்திற்காக தொடர்ந்து உறுதியாக போராடி வருகிறேன். இனி வரும் காலங்களிலும் அத்தகைய பணி தொடரும். இருப்பினும், தவெகவில் இணைவது குறித்து கட்சி தலைமையிடம் கேளுங்கள் என்று சிரித்தப்படியே தனது விருப்பத்தை மறைமுகமாக தெரிவித்து புறப்பட்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0