டெல்டாவில் கெத்து கட்டிய தவெக ; பலம் இழந்த திமுக: முன்னேறிய அதிமுக
டெல்டாவில் கெத்து கட்டிய தவெக ; பலம் இழந்த திமுக: முன்னேறிய அதிமுக
தமிழகத்தின் மத்திய மண்டலமாக பார்க்கக்கூடிய டெல்டாவில் உள்ள 41 தொகுதிகளில் 2021 தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும்(வேதாரண்யம், நன்னிலம், ஒரத்தநாடு, விராலிமலை) வெற்றி பெற்றது.
ஆனால் இந்த தேர்தலில் திமுக தனியாக 15 இடங்களிலும் கூட்டணி கட்சிகள் 6 இடங்களிலும் என மொத்தம் 21 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றாலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட கூடுதல் தொகுதிகளில் வென்று பலம் காட்டியுள்ளது. அதேசமயம், திமுகவின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில்தான் இந்த தேர்தல் முடிவுகள் உள்ளன.
மத்திய மண்டலத்தில் இந்த தேர்தலில் திமுக கூட்டணி தன்னிடமிருந்து 16 இடங்களில் 12 இடங்களை தவெகவிடமும், 4 இடங்களை அதிமுகவிடம் இழந்துள்ளது.
கடந்த தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக இந்த தேர்தலில் தனியாக கரூர், லால்குடி, நன்னிலம், வேதாரண்யம், விராலிமலை, அரியலூர் என 6 இடங்களிலும், கூட்டணியில் மன்னார்குடி, ஜெயங்கொண்டம் என 2 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் வெற்றி பெற்று, தன்னையும் தன் கூட்டணிக் கட்சிகளையும் நிலை நிறுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் திராவிட கட்சிகளை தாண்டி தவெக எவ்வித கூட்டணியும் இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, தஞ்சாவூர், கும்பகோணம், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், முசிறி, துறையூர், பெரம்பலூர் என 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் டெல்டாவில் பலம் காட்டிய திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளுக்கும் புதிய கட்சியான தவெக 12 தொகுதிகளை வென்று பயம் காட்டியுள்ளது.
மத்திய மண்டலத்தில் மெல்ல மெல்ல திமுக பலம் இழக்கிறது என்பதை தவெக மற்றும் அதிமுகவின் வெற்றிகள் உணர்த்தியுள்ளன.
கடந்த 2021 தேர்தலில் திருச்சி திமுகவின் கோட்டையாக, அமைச்சர் கே என் நேருவின் கோட்டையாக கருதப்பட்ட நிலையில், 2026 தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் திருச்சி கிழக்கு, மணப்பாறை, ஸ்ரீரங்கம். திருவெறும்பூர், முசிறி, துறையூர் என 6 தொகுதிகளில் தவெகவும், கடந்த 4 தேர்தல்களில், அதாவது 2006, 2011, 2016, 2021 தேர்தல்களில் திமுக சட்டமன்ற உறுப்பினராக தம்மை தக்கவைத்துக் கொண்ட சௌந்தர பாண்டியனுக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்ட நிலையில், 2026 தேர்தலில் லால்குடி தொகுதியை திமுகவிடமிருந்து அதிமுக தட்டித் தூக்கி இருக்கின்றது. இதன் மூலம் திமுகவின் பலம் சரிந்துள்ளது.
டெல்டாவில் 41 தொகுதிகளின் வெற்றி தோல்விக்கு தாமே என பொறுப்பு ஏற்றுக்கொண்ட திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேருவின் தவறான அணுகுமுறையால் தான் திமுக வீழ்ந்துள்ளது என திமுகவினரே பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0