திருச்சியை சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேரை பலி வாங்கிய படகு விபத்து; கட்டியணைத்தபடி இறந்த தாய் - மகன்: 

May 2, 2026 - 10:55
 0  136
திருச்சியை சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேரை பலி வாங்கிய படகு விபத்து; கட்டியணைத்தபடி இறந்த தாய் - மகன்: 

திருச்சியை சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேரை பலி வாங்கிய படகு விபத்து; கட்டியணைத்தபடி இறந்த தாய் - மகன்: 

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் திருச்சியைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் பார்கி அணை அமைந்துள்ளது. நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில், சுற்றுலா பயணியருக்காக படகு சவாரி இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு ஊழியர்கள் மற்றும் 29 பயணியருடன் படகு ஒன்று நர்மதை ஆற்றில் சென்றது. ஆற்றின் மையப் பகுதிக்கு படகு சென்றபோது, தீடீரென சூறாவளி காற்று வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணியர் அச்சத்தில் அலறினர். படகை கரையை நோக்கி திருப்புமாறு ஊழியர்களிடம் கூறினர். அதிக சத்தத்துடன் படகு பயணித்ததால், பயணியரின் கூச்சல் ஊழியர்களுக்கு கேட்கவில்லை. அதேசமயம், காற்றின் வேகம் காரணமாக வேறு திசையில் பயணித்த படகு, திடீரென கவிழ்ந்தது.'லைப் ஜாக்கெட்' எனப்படும், உயிர் காக்கும் அங்கி அணிந்திருந்த பயணியர் சிலர், தண்ணீரில் மிதந்தபடி தப்ப முயன்றனர். இருப்பினும், முடியாமல் நீரில் மூழ்கினர். உடனடியாக, உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர், தண்ணீரில் மூழ்கிய 20க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.

முதற்கட்டமாக நான்கு பேரின் உடல்கள் இரவு 9:00 மணிக்கு மீட்கப்பட்டன. பல மணி நேர போராட்டத்துக்கு பின், மேலும் ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியின் போது, ஒரே லைப் ஜாக்கெட்டில் இணைக்கப்பட்டிருந்த தாய் மற்றும் அவரது 4 வயது மகனின் உடல்கள் மீட்கப்பட்டது காண்போரை கலங்க செய்தது.

விபத்தில் இருந்து தப்பியவர் கூறுகையில், 'பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை. குறைந்தளவே லைப் ஜாக்கெட் இருந்ததால், படகில் இருந்த பலர் அதை அணியவில்லை. திடீரென காற்று பலமாக வீசியதில் படகு தத்தளித்தது. உள்ளே தண்ணீர் புகுந்ததால் நிலை தடுமாறி படகு கவிழ்ந்தது. நாங்கள் எவ்வளவோ சத்தம் எழுப்பியும், படகை ஊழியர்கள் கரையை நோக்கி திருப்பவில்லை. கண்மூடி திறப்பதற்குள், எனது மனைவி, மாமியார், பேரன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். விபத்தில் சிக்கி 2 மணி நேரமாகப் போராடிய சையத் ரியாஸ் உசைன் என்பவரை மீட்புக் குழுவினர் மீட்டனர். தனது கண் முன்பே பலர் உயிரிழந்து மிதந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என்று அவர் அழுதபடி கூறினார்.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாநில அமைச்சர் ராகேஷ் சிங், மீட்பு பணியை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தினார். 'மீட்புப் பணிகள் முழுமையாக முடிந்த பின்பே விபத்து குறித்து முழுமையான விபரம் தெரியவரும். பலர் லைப் ஜாக்கெட் அணிந்திருந்தும் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது' என்றார்.

 திருச்சியைச் சேர்ந்த 5 பேர் பலி?

தமிழகத்தின் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் ஜபல்பூரில் உள்ள, ஆயுத தொழிற்சாலையில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கார்குழலி. மகன்கள் புவிதரன், தமிழ்வேந்தன், இவர்கள் அங்கேயே தொழிற்சாலை குடியிருப்பில் வசித்து வந்தனர். திருப்பூர் மாவட்டம், தாரபுரத்தில் வசிக்கும் கார்குழலியின் பெற்றோர் வடிவேல் - மாரியம்மாள், அண்ணன் மனைவி சவுபாக்கியம், அவரது குழந்தைகள் இனியா, மயூரன் ஆகியோர் காமராஜ் குடும்பத்தினரை பார்க்க ஜபல்பூர் சென்றிருந்தனர். 

 

சம்பவத்தன்று காமராஜ், அவரது மனைவி, மகன்கள், சவுபாக்கியம், அவர்களின் இரு குழந்தைகள், நர்மதை ஆற்றில் சுற்றுலா படகில் சென்றபோது, படகு விபத்தில் சிக்கினர். இதில் கார்குழலி, சவுபாக்கியம் ஆகியோர் உயிரிழந்தனர். காமராஜ் மகன் புவிதரன், சவுபாக்கியம் மகள் இனியா ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். காமராஜ், அவரது மற்றொரு மகன் தமிழ்வேந்தன், சவுபாக்கியம் மகன் மயூரன் ஆகியோரை தேடும் பணி தொடர்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0