தமிழகத் தேர்தல்: தூத்துக்குடிக்கு ரூ.17,000, மதுரை, திருச்சிக்கு ரூ.14,000; எகிறிய விமானக் கட்டணத்தால் பயணிகள் அதிர்ச்சி

Apr 22, 2026 - 11:44
 0  17
தமிழகத் தேர்தல்: தூத்துக்குடிக்கு ரூ.17,000, மதுரை, திருச்சிக்கு ரூ.14,000; எகிறிய விமானக் கட்டணத்தால் பயணிகள் அதிர்ச்சி

தமிழகத் தேர்தல்: தூத்துக்குடிக்கு ரூ.17,000, மதுரை, திருச்சிக்கு ரூ.14,000; எகிறிய விமானக் கட்டணத்தால் பயணிகள் அதிர்ச்சி

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் விமானக் கட்டணங்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்குப் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதனால் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க திட்டமிட்டிருந்த பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெறுகிறது. இதற்காக சென்னை, பெங்களூர், டெல்லி, வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த அதீத தேவையால் விமானக் கட்டணங்கள் இன்று (ஏப்ரல் 22) விண்ணைத் தொட்டுள்ளன.

குறிப்பாக, சென்னை - தூத்துக்குடி, திருச்சி, மதுரை வழித்தடத்தில் கட்டணம் சுமார் 227% அதிகரித்துள்ளது. அதேபோல் கோவைக்கான கட்டணம் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சென்னை- தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.5,354 கட்டணமாக உள்ள நிலையில் இன்று 17,527ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.13,320, திருச்சிக்கு ரூ.14,237, சென்னை- கோவைக்கு ரூ.12,027ஆக உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

அதேநேரம், பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் முன்கூட்டியே விற்றுத் தீர்ந்துவிட்டன. மீதமுள்ள ஒரு சில டிக்கெட்டுகளும் மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அதிக விலை கொடுத்து பயணிக்க முடியாத நடுத்தர வர்க்கத்தினர், மாற்று போக்குவரத்து வசதிகளான ரயில் மற்றும் பேருந்துகளைத் தேடி அலைகின்றனர்.

தேர்தலுக்காக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாகப் புகார் அளிக்கப் பிரத்யேக எண்களையும் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், கடைசி நேரத்தில் விமானக் கட்டணங்கள் பல ஆயிரக்கணக்கில் உயர்ந்துள்ளது, ஜனநாயகக் கடமையை ஆற்ற விரும்பும் சாமானிய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0