டெல்லியில் உங்களுக்கான பாதுகாவலன் நான் - துறையூரில் ராகுல்

Apr 18, 2026 - 18:36
 0  113
டெல்லியில் உங்களுக்கான பாதுகாவலன் நான் - துறையூரில் ராகுல்

டெல்லியில் உங்களுக்கான பாதுகாவலன் நான் - துறையூரில் ராகுல்

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் வெயிலையும் கடந்து சூடு பிடித்துள்ளது. வரும் 23ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் அனல் பறக்கின்றது.  

அந்தவகையில், திருச்சி துறையூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக இன்று மாலை திருச்சி வருகை தந்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல். 

திருச்சி விமான நிலையத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் துறையூர் சென்ற ராகுல் காந்தி திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது;

இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. முன்னெப்போதும் இல்லாத அளவு கடுமையான தேர்தல். என்ன விலை கொடுத்தாவது முதல்வர் பதவியில் இருந்து மு.க. ஸ்டாலினை நீக்கிவிட்டு, பதிலாக ஒரு பொம்மை முதல்வரை நியமிக்க பாஜகவினர் முயற்சிக்கிறார்கள்.

அதிமுக தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க கட்சி. ஆனால் இப்போது பாஜகவின் முகமூடியாகவும் பொம்மை கட்சியாகவும் இருக்கிறது அதிமுக. இவர்கள் வழியில்தான் பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் தமிழ்நாட்டுக்குள் நுழையப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டின் மொழி, கலாசாரத்தைச் சிதைக்க நினைக்கிறார்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தங்களது ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக பாஜகவிடம் சரணடந்திருக்கிறார்கள். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளால் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும். அவர் தமிழ்நாட்டுக்கான தனது கொள்கைகளை எதற்காகவும் சமரசம் செய்துகொள்ள மாட்டார் என்றும் பாஜகவுக்கு நன்றாகத் தெரியும். சமூக நீதி இங்கு எவ்வளவு காக்கப்படுகிறது என மற்ற மாநிலங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

டிரம்ப் நினைப்பதை மோடி செய்வார், டிரம்ப் என்ன சொல்கிறாரோ அதையே மோடி செய்வார். மோடியை முழுவதுமாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் டிரம்ப். அதுபோலவே மோடி சொல்வதைச் செய்ய ஒரு முதல்வர் தேவைப்படுகிறார்.

அமெரிக்காவிடம் இந்தியாவை விற்றுவிட்டார் மோடி. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், தரவுகள், எரிசக்தி அனைத்தையும் விற்றுவிட்டார் மோடி. எப்ஸ்டீன் கோப்புகள் மூலமாக மோடியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது அமெரிக்கா.

ஒரு பக்கம் நாம் இருக்கிறோம், மற்றொரு பக்கம் பாஜகவுடன் அதிமுக நிற்கிறது. பாஜக அரசு நம் முதல்வர் ஸ்டாலினை அகற்றிவிட்டு பொம்மை முதல்வரை வைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. 

தமிழ்நாட்டுக்கும் எனக்கும் உள்ள உறவை அவர்களால் ஒருபோதும் குலைக்க முடியாது. இது வெறும் அரசியல் உறவு அல்ல. இது அன்பின் உறவு. எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியுடன் என்னையும் தொடரும் பாசப் பிணைப்பு. டெல்லியில் உங்களுக்கான பாதுகாவலனாக நான் இருக்கின்றேன். தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் குரல் கொடுப்பேன். நீங்கள் சொல்வதை நான் செய்து முடிப்பேன். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடக்கூடிய காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் திமுக தோழமைக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டதும், அமைச்சர் கே என் நேரு ராகுல் காந்தியை வரவேற்று பேசுகையில், எங்கள் வெற்றியை கடந்து எங்களது தோழமைக் கட்சியின் வெற்றி மிக முக்கியமானது என பேசியதும் குறிப்பிடத்தக்கது.

 ராகுல் காந்தி தனது உரையில் திமுக வேட்பாளர்களின் பெயர்களையும், காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் தங்கபாலு, திருச்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ், வக்கீல் சரவணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் பெயரை உச்சரித்து தமது உரையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0