சாத்தான்குளம் தந்தை மகன் சாவுக்கு எடப்பாடி பழனிச்சாமியே காரணம் - கே என் நேருவை ஆதரித்து வைகோ பிரச்சாரம்
சாத்தான்குளம் தந்தை மகன் சாவுக்கு எடப்பாடி பழனிச்சாமியே காரணம் - கே என் நேருவை ஆதரித்து வைகோ பிரச்சாரம்
தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், திமுகவின் தோழமைக் கட்சியான மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என்.நேருவை ஆதரித்து, திருச்சி உறையூா் பாண்டமங்கலம் பகுதியில் நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
சுயமரியாதை, சமூக நீதி, சகோதரத்துவம், கூட்டாட்சி கருத்தியல் கொண்ட ஸ்டாலின் தலைமையிலான திமுக, கடந்த 5 ஆண்டு காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இதில் அமைச்சா் கே.என். நேரு வியக்கத்தக்க திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளாா்.
ஸ்டொலைட் போராட்டத்தில் 13 உயிா்களைக் காவு வாங்கியவா் அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி. இதேபோல, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் அடித்துக் கொல்லப்பட்டதற்கும் அப்போதைய அதிமுக அரசுதான் பொறுப்பு.
மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆணவத்துடன் திமுகவை வேருடன் பிடுங்கி எறிவேன் என்றாா். இதேபோல, அண்ணாமலையும் கூறியுள்ளாா். 75 ஆண்டுகால பாரம்பரிய திமுகவை தோற்கடிப்போம் எனப் பேசினால், அது ஜனநாயக உரிமை. ஆனால், மண்ணுடன் கலந்திருக்கக் கூடிய இயக்கத்தை அழிப்போம் என்கின்றனா்.
தோ்தலில் வெற்றி பெற்று, அடுத்து அமையப் போவது ஸ்டாலினின் திமுக ஆட்சிதான்; கூட்டணி ஆட்சியல்ல. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
தமிழகத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை கொடுத்த ஸ்டாலின் திமுக அரசு மீண்டும் அமைய தமிழக மக்கள் உரிய தீா்ப்பு வழங்குவாா்கள்.
எனவே, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க, மீண்டும் அமைச்சராக கே.என். நேரு வர உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்றாா் வைகோ.
நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மதிமுக மணவை தமிழ்மாணிக்கம் டாக்டர் ரொக்கையா மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக நேற்று மாலை திருவாரூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் முடித்துக் கொண்டு வைகோ திருச்சி வருவதற்கு மிகவும் காலதாமதமானது. திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழியை ஆதரித்து கல்கண்டார் கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ கே என் நேருவை ஆதரித்து உறையூரில் பேச வருவதற்கு மிகவும் காலதாமதமானது. இதற்கிடையே 9 மணிக்கு துறையூரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நேரு பேசுவதாக நேரம் குறித்து இருந்த நிலையில் அதற்காக துறையூர் சென்று விட்டார் அமைச்சர் நேரு.
அமைச்சர் நேரு மேற்குத் தொகுதியில் இல்லாத நிலையில் அவரை ஆதரித்து வைகோ பிரச்சாரம் மேற்கொண்டதும், இன்று காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவர் தங்கி இருக்கும் விடுதிக்குச் சென்று கே என் நேரு நேரில் பார்த்து நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0