பள்ளி கல்வித்துறை தள்ளாடும் துறையாக இயங்கிக் கொண்டிருக்கிறது- ப.குமாரை ஆதரித்து டிடிவி தினகரன் பிரசாரம்
பள்ளி கல்வித்துறை தள்ளாடும் துறையாக இயங்கிக் கொண்டிருக்கிறது- ப.குமாரை ஆதரித்து டிடிவி தினகரன் பிரசாரம்
தமிழகத்தில் தேர்தல் பிரச்சார களம் அனல் பறக்கும் வெயிலை கடந்து சூடு பிடித்திருக்கின்றது. தமிழக தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் என அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருச்சி முன்னாள் எம்பி ப.குமாரை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவெறும்பூர் பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
நமது வெற்றி வேட்பாளரை ஏற்கனவே அம்மா அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் நிறுத்த அவரை பெருவாரியான வாக்கில் வெற்றி பெற வைத்த நீங்கள் இந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவர் யாரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது உங்களுக்குத் தெரியும்.
பள்ளிக்கல்வித்துறையை பாழாக்கிய துறையாக மாற்றி வைத்துள்ளார் திருவெறுபூர் தொகுதியின் எம்எல்ஏவும், பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி. குழந்தைகளுக்கு அடிப்படையே பள்ளிக்கல்வி. ஆனால், இத்தொகுதியின் எம்எல்ஏ, பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சர் என்பதை விட, உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றத் தலைவராக செயல்படுவதற்கே முக்கியத்துவம் காட்டுறார். திருவெறும்பூர் தொகுதியின் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எம்எல்ஏவாக அவரது செயல்பாடுகள் வருத்தத்தை அளிக்கிறது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மிக மோசமான நிலையில் உள்ளன. அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறை. இருக்கும் ஆசிரியர்களும் தினமும் போராட்டம் நடத்தும் அளவுக்கு உள்ளது பள்ளிக்கல்வித்துறை.
பள்ளிகளில் கஞ்சா விற்கப்படும் சூழல் நிலவுகிறது. தமிழகத்தின் எதிர்காலமான பள்ளிக் குழந்தைகள். அவர்களைக் கவனிக்க வேண்டிய அமைச்சர், விளையாட்டுத்தனமாக உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவராக உதயநிதிக்கு வாலாக சுற்றித்திரிகிறார். பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் அவலம் தொடர்கிறது. பள்ளி கல்வித்துறை தள்ளாடும் துறையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தொகுதியில் அவர் சொன்ன வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை.
தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் கஞ்சா விற்கிறது. இதற்குப் பின்னணியில் திமுகவினர் இருக்கின்றனர்.
தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை. திமுகவினரே கொலை செய்யப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்கித்தருகிறேன் என வாக்குறுதியளித்த திமுக, கூலிப்படைகள் உருவாவதற்கு காரணமாகி விட்டது.
திருவெறும்பூர் தொகுதி மக்களை காசு கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என நினைக்கின்றனர். மக்கள் இம்முறை ஏமாற மாட்டார்கள். தமிழகத்துக்கு பாதுகாப்பான அம்மா ஆட்சி தமிழகத்தில் மீண்டும் இபிஎஸ் தலைமையில் அமைய, தொகுதியின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றித் தர ப.குமாரை பெருவாரியாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள். பச்சிளங்குழந்தை முதல் மூதாட்டி வரை பாதுகாப்பாக இல்லை. இதையெல்லாம் மாற்ற, மீண்டும் தமிழகத்தில் மக்களாட்சி அமைய, வாக்களிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை என்றார் டிடிவி. தினகரன்.
முன்னதாக, டிடிவி தினகரன் பேசிக் கொண்டிருக்கையில் துணை முதல்வர் உதயநிதி வாகனம் எதிர் திசையில் வந்ததால் சிறிது நேரம் அங்கே பரபரப்பு நிலவியது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0