எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்வி ஜன்னி - மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து கி வீரமணி பிரசாரம் 

Apr 10, 2026 - 19:25
 0  22
எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்வி ஜன்னி - மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து கி வீரமணி பிரசாரம் 

எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்வி ஜன்னி - மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து கி வீரமணி பிரசாரம் 

திருவரம்பூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அரியமங்கலம் பகுதியில் வாக்குகள் சேகரித்து உரையாற்றினார்.

 அப்பொழுது அவர் பேசுகையில்; பெருமளவில் பெண்கள் வந்திருக்கிறீர்கள், இதிலிருந்து தெரிகிறது எங்களுடைய வாக்கு உதயசூரியனுக்கு தான் என்று உறுதியோடு ஊக்கத்தோடு மகிழ்ச்சியோடு வந்திருக்கிறீர்கள் என்று பார்க்கிறபோது எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

பெண்களுக்கு இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி அவ்வளவு நன்மைகள் திட்டங்கள் செய்து வருகிறது. பெண்களுக்கென அதிக திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள், மற்ற தேர்தல்கள்போல இந்த தேர்தல் இல்லை. இந்த தேர்தல் சாதாரண தேர்தலும் இல்லை, மிக முக்கியமாக நமது வாழ்வாதாரத்திற்கான தேர்தல்.

காரணம், ஒரு காலத்தில் பெண்கள் எப்படி அடிமைப்படுத்தப்பட்டு வைத்திருந்தார்கள், இன்றைக்கு அந்த நிலை மாறியிருக்கிறது அல்லவா.

பாரதிய ஜனதா கட்சியைத் தமிழ்நாட்டுத் தேர்தல் தோல்வி பயம் பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டது. தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிகார எல்லைகளை மீறி பல்வேறு அதீத நடவடிக்கைகளை மேற்கொண்டி ருக்கிறது. முதலில் மாவட்ட அளவில் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் போன்றவர்களைத் திட்டமிட்டே மாற்றினார்கள். தமிழ்நாட்டின் டி.ஜி.பி.யை மாற்றினார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரையும் டி.ஜி.பி.க்களில் மற்றொருவரையும் மாற்றி இருக்கிறார்கள்.

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில், குறிப்பாக கேரளம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அசாம் மாநிலத்திலும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது என்றாலும் அங்கு எஸ்.அய்.ஆர் இல்லை; அதிகாரிகள் பணி மாறுதல் இல்லை; பாரதிய ஜனதா கட்சிக்கு ஏதுவான சூழல் இருக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்கிறது.

முன்பு அதிகாரத்தில் இருந்தவர்கள் யாரு டனும் பணியாற்றியவர் இருக்கக் கூடாது என்று சொல்லப்படுமேயானால், தற்போது நியமிக்கப்பட்டி ருக்கும் தலைமைச் செயலாளர் கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என்பது மறுக்க முடியாதது.

தேர்தல் ஆணையத்தால் அதிகாரிகளை மாற்ற முடியும், காவல்துறையினரை மாற்ற முடியும், ஆனால், வாக்களிக்கும் வாக்காளர்களை ஒருபோதும் மாற்ற முடியாது. தேர்தல் ஆணையம் யாரையும் மாற்றலாம். மக்களை ஏமாற்ற முடியாது. ஏப்ரல் 23ஆம் தேதி மக்கள் தீர்ப்பளிப்பார்கள்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அண்மைக்காலப் பேச்சுகள் அரசியல் நாகரிகத்திற்கேற்ப அமையவில்லை. தானும் ஒரு தேர்தல் போட்டியாளர் என்பதைக் கடந்து, தான் வகிக்கும் பொறுப்புகளை மறந்து, தன்னிலை இழந்து பேசி வருகிறார்.

தேர்தலில் வெற்றி – தோல்வி என்பதை விட, மக்கள் மனதில் நாம் என்னவாகப் பதிவாகியிருக்கிறோம் என்பதே முக்கியமாகும். அதில் எடப்பாடி பழனிசாமி, மிகப்பெரிய கீழிறக்கத்துக்குப் போய்விட்டார்.

தோல்வி உறுதி’ என்று தெளிவாகத் தெரிந்ததால், முற்றிலும் நிதானம் இழந்து, ஜன்னியில் பிதற்றுவதைப் போல அவரது பேச்சு அமைந்திருக்கிறது.

ஏற்கெனவே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் குறித்துப் பேசியதும், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் குறித்துப் பேசியிருப்பதும் பண்பற்ற பேச்சுகள், அநாகரிகத்தின் உச்சம். இது கண்டனத்திற்குரியதாகும். எடப்பாடி பழனிசாமி கடைசி வரைக்கும் பஜனை பண்ணிக்கொண்டு தான் இருக்க முடியும் கோட்டைக்கு போக முடியாது. 

திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமது துறையில் பெரிய வாய்ப்பாக இன்றைக்கு வெளி நாட்டில் போய் பயிற்சி எடுத்து வருகிறார்கள்,

பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த துறைக்கு அமைச்சராக இருக்க கூடிய நமது திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அருமை தோழர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். வருகிற 23-ம் தேதி வாக்கு செலுத்தும்போது அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெயர் எங்கு உள்ளது என்று பாருங்கள் அதற்கு நேராக இருக்கும் உதய சூரியன் சின்னத்தில் பொத்தானை அழுத்தினால் விளக்கு எரியும் அங்கு விளக்கு எரிந்தால் உங்களுக்கு எல்லாம் வெளிச்சம் கிடைக்கும் என பேசினார்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தி க தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு குணசேகரன், தஞ்சை பெரியார் செல்வன், தஞ்சை ஜெயக்குமார், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட ப.க தலைவர் மதிவாணன் வரவேற்றார். திமுக பகுதி செயலாளர் மதிவாணன், கமால் உள்ளிட்ட திமுக தோழமைக் கட்சி நிர்வாகிகள் திக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0